Editorial / 2026 மார்ச் 22 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிகாடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மாவட்டப் புலனாய்வுப் பிரிவினரின் அதிரடி நடவடிக்கையினால் 24 மணித்தியாலங்களுக்குள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் கணவனின் தம்பி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்ணைக் கடத்தி, மயக்க மருந்து கொடுத்து, அவரது தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்த பின்னரே கிணற்றில் வீசியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை, வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு 2½ வயதுக் குழந்தையுடன் சென்ற இளம் தாய் ஒருவர் காணாமல் போயிருந்தார்.அடுத்த நாள் வெள்ளிக்கிழமை, குறித்த தாய் பாழடைந்த கிணறு ஒன்றினுள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அவரது குழந்தை அருகில் உள்ள வயல் பகுதியில் கைவிடப்பட்டு அழுதுகொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இதேவேளை, அதே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்னால் பேருந்துக்காகக் காத்திருந்த அந்தத் தாயை, முச்சக்கர வண்டியில் வந்த தம்பதியினர் "குறைந்த வாடகையில் மட்டக்களப்புக்கு அழைத்துச் செல்கிறோம்" எனக் கூறி ஏற்றியுள்ளனர்.
நகருக்குச் சென்று அவர் தனது அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு திரும்பியபோது, மீண்டும் அவரை அதே முச்சக்கர வண்டியில் ஏற்றியுள்ளனர்.
பயணத்தின்போது, மயக்க மருந்து கலந்த பழச்சாற்றை (Juice) அந்தத் தாய்க்கு வழங்கியுள்ளனர். அதனைப் பருகிய அவர் மயக்கமடைந்ததும், வலையிறவுப் பாலத்திற்கு அருகில் காத்திருந்த கணவனின் தம்பியும் முச்சக்கர வண்டியில் ஏறிக்கொண்டுள்ளார்.
மயக்கத்திலிருந்த தாயின் கழுத்திலிருந்த 5 பவுண் தாலிக்கொடி மற்றும் ஒரு பவுண் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்ட கும்பல், குழந்தையை வயல் பகுதியில் வீசி எறிந்துள்ளது.
பின்னர், மயக்கமடைந்த தாயைத் தாந்தாமலை நெல்லிகாடு பகுதிக்குக் கொண்டு சென்று பாழடைந்த கிணற்றுக்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை அவர்கள் அடகு வைத்துப் பணம் பெற்றுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மற்றுமொரு பெண்ணையும், இதே பாணியில் மயக்க மருந்து கொடுத்து, நகைகளைக் கொள்ளையடித்த பின்னரே கிணற்றில் வீசியதாகச் சந்தேகநபர்கள் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித்த லீலாரத்ன தலைமையிலான விசேட குழுவினர், சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்து விசாரணைகளை முடுக்கிவிட்டனர். இதன் பலனாக, வந்தாறுமூலை ஆலையடி வீதியில் மறைந்திருந்த 26 வயதுடைய பெண் (மனைவி) முதலில் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து 34 வயதுடைய கணவர் மற்றும் 22 வயதுடைய அவரது தம்பியும் வவுணதீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


10 minute ago
22 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
37 minute ago