2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

காணி கேட்டவர்களுக்கு பிஸ்கட் வழங்கிய கடற்படை

Simrith   / 2023 ஜூலை 12 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில்,   புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக  அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்மண்டைதீவு கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை(12) காலை 7.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் நகர்ந்து சென்று வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.

போராட்டம் காரணமாக நில அளவை திணைக்களத்தினர் தமது பணியை முன்னெடுக்காது , திரும்பி சென்றனர். 

அதனை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்த போது , தமது முகாமிற்கு முன்பாக போராடிய மக்களுக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களை கடற்படையினர் வழங்கினார். 

அதற்கு மக்கள், " எங்கள் காணிகளை சுவீகரித்துக்கொண்டு எமக்கு பிஸ்கட் தருகிறீர்களா ? எங்கள் காணிகளை எங்களிடம் கையளித்து விட்டு ,செல்லுங்கள். எங்களுக்கு பிஸ்கட் தந்து எங்கள் காணிகளை பறிக்காதீர்கள் என கூறி அவற்றை வாங்க மறுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .