2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

2015இன் சிறந்த வீரராக ஸ்டீவன் ஸ்மித்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த வீரராக, அவுஸ்திரேலியாவின் டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவாகியுள்ளார்.

இந்தத் தெரிவுக்காக, 'ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் கிண்ணம்" அவருக்குக் கிடைத்தது. அதுதவிர, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதும், அவருக்கே கிடைத்தது.

செப்டெம்பர் 18, 2014 தொடக்கம் செப்டெம்பர் 13, 2015 வரையிலான காலப்பகுதியில் காட்டிய திறமைகளுக்கேற்பவே, இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

அக்காலப்பகுதியில், டெஸ்ட் போட்டிகளில்,  82.57 என்ற சராசரியில் 1,734 ஓட்டங்களைக் குவித்த ஸ்மித், அதிக டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றிருந்வர்களில் முதன்மையானவராக விளங்கினார். அத்தோடு, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில்,  59.47 என்ற சராசரியில் 1,249 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இத்திறமைகளுக்காகவே, அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி வீரராக ஏ.பி டி வில்லியர்ஸ் தெரிவானதோடு, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் சிறந்த திறமை வெளிப்பாட்டுக்கான விருது, பப் டு பிளெஸிஸூக்குக் கிடைத்தது.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறந்த வீராங்கனைக்கான விருது அவுஸ்திரேலியாவின் மெக் லனிங், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளின் சிறந்த வீராங்கனைக்கான விருது, மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்டபானி டெய்லர் தெரிவானார்.

சிறந்த விளையாட்டுணர்வை வெளிப்படுத்தியமைக்கான விருது, நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலத்துக்கு வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணியை, சிறப்பான உணர்வுகளுடன் விளையாடத் தூண்டியமைக்காக, இந்த விருது வழங்கப்பட்டது.

விருது விவரம்:

சிறந்த கிரிக்கெட் வீரர்: ஸ்டீவன் ஸ்மித் - அவுஸ்திரேலியா. (டெஸ்ட் - ஓட். - 1,734, சரா. - 82.57. ஒ.நா.ச.போட்டிகள்: ஓட். - 1,249, சரா. - 59.47.)

டெஸ்ட் சிறந்த கிரிக்கெட் வீரர்: ஸ்டீவன் ஸ்மித்.

ஒ.நா.ச.போட்டி சிறந்த வீரர்: ஏ.பி டி வில்லியர்ஸ் - தென்னாபிரிக்கா. (ஓட். - 1,265, சரா. - 79.06, ஸ்ட்ரைக் றேட் - 128.42.)

ஒ.நா.ச.போட்டி சிறந்த வீராங்கனை: மெக் லனிங் - அவுஸ்திரேலியா. (ஓட். - 531, சரா. - 88.50.)

இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி சிறந்த வீராங்கனை: ஸ்டபானி டெய்லர் - மேற்கிந்தியத் தீவுகள். (ஓட். 340, சரா. - 42.50, ஸ்ட்ரைக் றேட் - 105.91.)

இருபதுக்கு-20 சிறந்த பெறுபேறு: பப் டு பிளெஸிஸ் - தென்னாபிரிக்கா. (மே.தீவுகளுக்கெதிராக 56 பந்துகளில் 119 ஓட்.)

வளர்ந்துவரும் சிறந்த வீரர்: ஜொஷ் ஹேஸல்வூட் - அவுஸ்திரேலியா. (9 டெஸ்ட், 40 விக்., சரா. - 21.75.)

உப அங்கத்துவ நாட்டு சிறந்த வீரர்: குர்றாம் கான் - ஐ.அ.அமீரகம்.

சிறந்த விளையாட்டுணர்வுக்கான விருது: பிரென்டன் மக்கலம்.

சிறந்த நடுவர்: றிச்சர்ட் கெட்டல்புரோ.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .