Gopikrishna Kanagalingam / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக T20 சம்பியனாகியிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியை, அந்த வெற்றிக்கனியை அட்டகாசமான அதிரடியோடு சுவைக்க வைத்தவர் கார்லோஸ் ப்ரத் வெய்ட். அந்த வெற்றியின் பின்னரான பேட்டியொன்றின்போது, அந்தப் போட்டியின் இறுதித் தருணங்கள் பற்றிய அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்திருக்கிறார்.
'க்றிஸ் ஜோர்டான் வீசிய 19ஆவது ஓவர் இங்கிலாந்துக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. அந்த ஓவரில் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரியையாவது அடித்து, சாமுவெல்ஸின் வேலைப் பழுவைக் குறைக்க முயன்றேன். ஆனால், அது முடியாமல் போய்விட்டது. ஜோர்டான் மிக அற்புதமாக வீசியிருந்தார். அதிலும் யோர்க்கராக வீசப்பட்ட இறுதிப் பந்தில் ஓட்டமெதனையும் பெற முடியாமல் போனபோது, இறுதி ஓவரின் முதல் பந்தை எதிர்கொள்ளவேண்டியவனானேன்.
பென் ஸ்டோக்ஸ் இறுதி ஓவரை வீசத் தயாரானபோது, சாமுவேல்ஸ் என்னிடம் 'பந்தை உயரே அடி. என்ன நடந்தாலும் நான் ஓடுவேன்!' என்றார். பந்தை துடுப்பில் படவைப்பதும், அதன் பின்னர் அதிகபட்சமாக எத்தனை ஓட்டங்களை ஓடி எடுக்கமுடியுமோ அதனை பெறுவதுமே அந்த வேளையில் எமது திட்டமாக இருந்தது.
முதல் பந்து வீசப்பட்டபோது பதட்டமாகவே இருந்தேன். நல்லவேளையாக அடித்தபந்து ஃபைன் லெக் திசையில் சென்றது. மார்லோன் ஓடினார். பந்து எல்லைக்கு மேலால் சென்றது. ஆனாலும், அதற்குப் பின்னரும் எமக்கு பாரிய பணி இருந்ததை உணர்ந்தே இருந்தேன்.
இரண்டாவது பந்து வீசப்பட்டது. பந்தை சுழற்றியடிக்க தயாராகவே இருந்தேன். அடித்தேன். அந்தப் பந்தும் எல்லைக்கு மேலால் சென்று ஆறு ஓட்டங்களைத் தந்தது. அந்தப் பந்து, பென் ஸ்டோக்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு வீசப்படவில்லை என்றே நினைக்கிறேன். அதில் அவர் தவறியிருந்தார். அந்த ஆறு ஓட்டம் பெறப்பட்டதும், நாங்கள் வெற்றியை நெருங்கிவிட்டோம் என்று உணர்ந்தேன்.
ஆனாலும், எதையும் தீர்மானித்துக்கொள்ள முடியாத தருணம் என்பதும் தெரியும். பதட்டமாகவே இருந்தது.
மூன்றாவது பந்துக்கு தயாரானவேளை, நான்கு பந்துகளில் ஏழு ஓட்டங்கள் தேவைப்பட்டன. அப்போதும் சாமுவேல்ஸ் என்னிடம் கூறினார், மட்டையில் பந்தைப் படச் செய். நாங்கள் ஓடுவோம்!
அந்த அடியும் எனக்கு சரியாக அமையவில்லை. ஸ்டோக்ஸ் அந்தப் பந்தை மிகச் சிறப்பாகவே வீசியிருந்தார். ஆனாலும், எதிர்பாராத விதமாக அதுவும் லோங் - ஓஃவ் திசையில் ஆறு ஓட்டமாக மாறியது.
அடுத்து ஒரேயொரு ஓட்டம் மட்டுமே தேவைப்பட்டது நாங்கள் சம்பியனாவதற்கு. களத்தடுப்பாளர்கள் அனைவரும் அருகே வந்துவிட்டதால், உயர்த்தியடித்து அவர்களைத் தாண்டிவிட்டால் நாங்கள் சம்பியன்களாகிவிடுவோம் என்பதை உணர்ந்திருந்தேன். பந்தை துல்லியமாக அவதானித்தேன், அடித்தேன். அது மிட் - ஒன் திசையில் சென்றது தெரியும். ஆனால், ஆறு ஓட்டமாக மாறியது என்பதை சக வீரர்கள் சொன்னபின்புதான் அறிந்துகொண்டேன்.
எல்லோரும் எங்களை மொய்த்துக்கொண்டபோது நாங்கள் சம்பியனாகிவிட்டோம் என்பது மட்டுமே தெரிந்திருந்தது. பின்னர்தான், அடுத்தடுத்து நான்கு ஆறு ஓட்டங்களை அடித்திருக்கிறேன் என்பதை அவர்கள் புரியவைத்தார்கள்.
ஒரேயொரு ஓட்டம் எடுக்கவேண்டியிருந்த நிலையில் ஏன் அப்படி சிக்ஸர் அடிக்க நினைத்தாய்? என்று பலரும் கேட்கிறார்கள். களத்தடுப்பாளர்களது தலைகளுக்கு மேலால் உயர்த்தியடிக்கவேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணமாக இருந்தது.
ஒரு ஓட்டத்தை எடுக்க முயலும்போது ரன் - அவுட் ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒருவர் ஆட்டமிழந்தால் அடுத்து களத்துக்கு வரப்போகிறவர் என்ன செய்வார் என்பதையும் அனுமானிக்கமுடியாது. சுப்பர் ஓவருக்கு போனால், போட்டி யாருக்குவேண்டுமானாலும் சாதகமாக மாறலாம். எனவே பலமாக அடித்து பந்தை எல்லைக் கோட்டுக்கு வெளியே அனுப்புவதே சரியாக இருக்கும் என்பதை அந்தப் பந்து வீசுவதற்கு முன்னரே தீர்மானித்துக்கொண்டேன்.
இறுதி ஓவரை வீசுகிறபோது பெரும்பாலும் அவர்களது திட்டம், ஒன்று - மிதவேகமாக விக்கெட்டை நோக்கி வீசுவது, அல்லது பிட்ச் செய்யாமலும் எட்ட முடியாமலும் முழுமையாக நேராக வீசுவதாக இருக்கலாம் என்பதை எதிர்பார்த்தோம். இறுதி ஓவர்களை வீசுவதில் இங்கிலாந்து வீர்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டிருப்பதை உணர்ந்தேயிருந்தோம். எனவே, அதற்கு முழுமையாக ஆயத்தமாகியிருந்தோம்.
எனக்கு கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதென்றால் மிகுந்த ஆர்வம். அதிலும், அதிக ஓட்டங்களை எடுப்பவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கனவிப்பேன். இறுதிவரை பந்தினை அவர்கள் நோட்டமிடுவதையும், துடுப்பு மட்டையை வாகாக திருப்பிவைத்து அடிப்பதனையும் மனதிலே ஆழமாகப் பதியவைத்துக்கொள்வேன். அவ்வாறு பார்த்த விடயங்களைத்தான் அன்று செயற்படுத்த முனைந்தேன். இறுதியில், நாங்கள் சம்பியன்கள்! அநத உணர்வை வார்த்தைகளால் வர்ணித்திட இயலாது!!
இறுதி ஓவரை வீசியிருந்த பென் ஸ்டோக்ஸ் மிகச் சிறப்பான பந்துவீச்சாளர். கடந்த சில மாதங்களாக இங்கிலாந்துக்காக அவர் விளையாடிய விதத்தினை சட்டென்று ஒதுக்கிவிடமுடியாது. அவர் மீது இப்போது பலருக்கும் வருத்தம் இருக்கலாம். ஆனால், அதிலிருந்து அவர் நிச்சயம் மீண்டுவருவார்.
ஸ்டுவர்ட் ப்ரோட்டின் பந்துவீச்சில் யுவராஜ் அடித்த ஆறுகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனாலும், அதன் பின்னர் ப்ரோட்டின் பந்துவீச்சு எப்படி அபரிமித வளர்ச்சி கட்டது என்பதும் உங்களுக்குத் தெரியும். அதேபோல, ஸ்டோக்ஸ்சும் இந்த அதிர்ச்சியிருந்து தன்னை மீட்டுக்கொள்வார். இங்கிலாந்து அணிக்கும், ஸ்டோக்ஸ்சுக்கும் இது ஒரு கடினமான தருணம். ஆனால், அவர்களது வெற்றிகரமான கிரிக்கெட் எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துக்கள்!'
10 minute ago
14 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
43 minute ago