2025 ஜூன் 14, சனிக்கிழமை

ஆண்டின் சிறந்த வீரர்களாக கமிந்து, அத்தப்பத்து

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 11 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் விருதுகள் இரவில், ஆண்டின் சிறந்த வீரராக கமிந்து மென்டிஸும், சிறந்த வீராங்கனையாக சாமரி அத்தப்பத்துவும் தெரிவாகினர்.

திங்கட்கிழமை (09) நடைபெற்ற இவ்விழாவுக்கான் காலப்பகுதியில்  74.92 என்ற சராசரியில் 1,049 ஓட்டங்களை கமிந்து பெற்ற நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த துடுப்பாட்டவீரராகவும் தெரிவானார்.

விருதுக்கான காலப் பகுதியில் 100 பந்துகளுக்கு 127.64 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 628 ஓட்டங்களைப் பெற்ற குசல் மென்டிஸ் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த துடுப்பாட்டவீரராகத் தெரிவானார்.

இதேவேளை விருதுக் காலத்தில் 63.09 என்ற சராசரியில் 694 ஓட்டங்களைப் பெற்ற பதும் நிஸங்க ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த துடுப்பாட்டவீரராகத் தெரிவானார்.

இந்நிலையில் ஆண்டின் சிறந்த வீராங்கனை தவிர இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த துடுப்பாட்ட, பந்துவீச்சு, சகலதுறை வீராங்கனையாகவும் சாமரி அத்தப்பத்து தெரிவாகியிருந்தார். விருதுக்கான காலப்பகுதியில் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 720 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 65.42 என்ற சராசரியில் 458 ஓட்டங்களைப் பெற்றதோடு ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையில் சிறந்த துடுப்பாட்ட, சகலதுறை வீராங்கனை விருதுகளை வென்றிருந்தார். 17 விக்கெட்டுகளை கைப்பற்றிய கவிஷா டில்ஹாரி சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை வென்றிருந்தார்.

இந்நிலையில் ஒன்பது டெஸ்ட்களில் 48 விக்கெட்டுகளை விருதுக்கான காலப்பகுதியில் கைப்பற்றிய பிரபாத் ஜெயசூரிய, டெஸ்டுக்கான சிறந்த பந்துவீச்சாளராகத் தெரிவானார்.

இதேவேளை 10 டெஸ்ட்களில் 710 ஓட்டங்களைப் பெற்றதோடு ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா டெஸ்ட்களுக்கான சிறந்த சகலதுறைவீரராகத் தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில் விருதுக் காலப்பகுதியில் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 38 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வனிது ஹசரங்க இரண்டு வகைப் போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளராகத் தெரிவானதோடு, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 179 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அதில் சிறந்த சகலதுறைவீரராகத் தெரிவானார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 50.41 என்ற சராசரியில் 605 ஓட்டங்களைப் பெற்ற அணித்தலைவர் சரித் அசலங்க, 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய நிலையில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறந்த சகலதுறைவீரராகத் தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 46.20 என்ற சராசரியில் 462 ஓட்டங்களைப் பெற்ற ஜனித் லியனகே, வளர்ந்து வரும் வீரராகத் தெரிவாகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .