Shanmugan Murugavel / 2016 ஜூன் 23 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
வடமாகாணத்தில் கிரிக்கெட் சங்கங்கள் இன்னும் இரண்டொரு வருடங்களில் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் வைத்துத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, 2016 தேசிய மட்ட விளையாட்டு பெருவிழா, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நடத்தப்படவிருப்பதாக் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் மற்றும் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டரங்கு மற்றும் நீச்சல் தடாகத்தை பயன்படுத்தி, தேசிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
கிளிநொச்சியில் 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு மைதானத்தில் பணிகள் தாமதமடைவது குறித்தும், யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டுக் கட்டடத் தொகுதியொன்றும் சர்வதேச கிரிக்கெட் அரங்கொன்றும் அமைக்கப்படுமா எனவும், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், ‘கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கிளிநொச்சியில் 250 மில்லியன் ரூபாய் செலவில் சர்வதேச விளையாட்டரங்கொன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அரச பொறியியல் கூட்டுத் தாபனத்தின் ஊடாகவே இதன் கட்டுமாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், அக்கூட்டுத்தாபனத்தில் காணப்பட்ட நிதிப் பிரச்சினை காரணமாக, கட்டுமானப் பணிகள் முடங்கிப் போயியுள்ளன. இது தொடர்பில் வீடமைப்பு மற்றும் பொறியியற்துறை அமைச்சருக்குத் தெரியப்படுத்தியுள்ளேன்” என்றார்.
"மேலதிகமாக யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கொன்றை அமைப்பதற்கான இடத்தை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் மன்னாரில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் ஒன்றரை மணி நேரத்தில் வந்துசேரக்கூடிய இடமான ஆனையிறவு பகுதியில், சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்” என்று மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், மன்னார் மாவட்டத்தில் 214 மில்லியன் ரூபாய் செலவில் நீச்சல் தடாகம், உள்ளக விளையாட்டரங்கு ஆகியவற்றை உள்ளடக்கிய விளையாட்டுத் தொகுதியும், வவுனியாவில் 215 மில்லியன் ரூபாய் செலவில் விளையாட்டுத் தொகுதியும் அமைக்கப்படவிருப்பதாக அவர் மேலும் கூறினார்.
23 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
7 hours ago