Shanmugan Murugavel / 2016 ஜூன் 20 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
போட்டி நிர்ணயத்தில் ஈடுபடுவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அனைவருக்கும் ஆயுட்தடை விதிக்கப்பட வேண்டுமென, ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டு, 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர் தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில், பணத்தைப் பெற்றுக்கொண்டு முறையற்ற பந்துகளை வீசியமை நிரூபிக்கப்பட்ட மொஹமட் ஆமிர், மொஹமட் ஆசிப், அவர்களை அக்குற்றத்தில் ஈடுபட வழிநடத்திய அப்போதைய தலைவர் சல்மான் பட் ஆகியோருக்கு, கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற குறிப்பிட்ட காலத்துக் தடை விதிக்கப்பட்டதோடு, சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
அம்மூவருமே கிரிக்கெட் போட்டிகளில் மீளப் பங்குபற்ற ஆரம்பித்துள்ள போதிலும், ஆமிர் மாத்திரம் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற ஆரம்பித்துள்ளார். அத்தோடு, டெஸ்ட் போட்டிகளில் அவரது மீள்வருகை, அவர் அகப்பட்ட இங்கிலாந்திலேயே இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ஆமிர், 'போட்டி நிர்ணயமென்பது கிரிக்கெட்டில் அனுமதிக்கப்படக்கூடாது. அதை மேற்கொண்டமை கண்டுபிடிக்கப்பட்ட அனைவருக்கும் ஆயுட்தடை விதிக்கப்பட வேண்டும்" என்றார். 'எங்களுடைய விடயங்களிலிருந்து யாராவது பாடம் கற்றுக்கொள்ளவில்லையெனில், அவர் தான் மிகப்பெரிய முட்டாளாக இருப்பார். எங்களுக்கு நடந்தவை, எங்களுடைய கிரிக்கெட் வாழ்வு சென்ற முறை ஆகியன, அனைவருக்குமான மிகப்பெரிய உதாரணமாகும்" என்றார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 'இழந்த ஆண்டுகளில் நாங்கள் அடைந்திருக்கக்கூடியவற்றை நினைத்துப் பாருங்கள். எனது வாழ்வின் மிகச்சிறந்த 5 ஆண்டுகளை நான் இழந்துவிட்டேன். அந்த ஆண்டுகளில் நான் விளையாடியிருந்தால், நான் எங்கே இருப்பேன் என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார்.
போட்டியின் குழறுபடிகளுக்கு, பல்வேறு தரப்பினர் மீதும் குற்றஞ்சுமத்தப்படும் நிலையில், அவ்வாறான குற்றத்தைப் புரிந்த ஆமிரோ, வீரர் மீது மாத்திரமே குற்றம் காணப்பட வேண்டுமெனத் தெரிவித்தார். 'வீரர் மாத்திரமே குற்றஞ்சாட்டப்பட வேண்டுமென நான் நினைக்கிறேன், அத்தோடு வேறு எவரும் உதவ முடியாது. நேர்மையாக இருப்பதற்கு வீரர் விரும்பவில்லையெனில், சொந்த நாட்டுக் கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் சபை, பெற்றோர் ஆகியோர் உதவ முடியாது" என ஆமிர் மேலும் குறிப்பிட்டார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago