2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: லிவர்பூல், லெய்செஸ்டர் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற போட்டிகளில் லிவர்பூல், லெய்செஸ்டர் சிற்றி, டொட்டேன்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

லிவர்பூல், ஸ்டோக் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையே இடம்பெற்ற போட்டியில், 4-1 என்ற கோல்கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் லிவர்பூல் சார்பாக களமிறங்கிய மாற்றுவீரர் டிவோக் ஒரிஜி இரண்டு கோல்களையும் அல்பேர்ட்டோ மொரேனோ, டானியல் ஸ்டர்ரிஜ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றனர். இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் 48 புள்ளிகளைப் பெற்றுள்ள லிவர்பூல், இங்கிலாந்து பிறிமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் எட்டாம் இடம் வகிக்கின்றது.

இதேவேளை, லெய்செஸ்டர் சிற்றி, சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றது. இப்போட்டியில் லெய்செஸ்டர் சிற்றி சார்பாக பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஜேமி வர்டி பெற்றிருந்தார். இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் 72 புள்ளிகளைப் பெற்றுள்ள லெய்செஸ்டர் சிற்றி, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடம் வகிக்கின்றது.

இந்நிலையில், டொட்டேன்ஹாம் ஹொட்ஸ்பர், மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-0 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோல்வியடைந்தது. இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் 65 புள்ளிகளைப் பெற்றுள்ள டொட்டேன்ஹாம் ஹொட்ஸ்பர் அணி, இங்கிலாந்து பிறீமியர் லீக் தரவரிசையில் முதலிடத்திலுள்ள லெய்செஸ்டர் சிற்றியை விட ஏழு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .