2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இங்கிலாந்து மீள்வருகையில் மிரட்டிய ஆமிர்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 05 , மு.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

லோர்ட்ஸில் 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்பொட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டு, ஐந்து வருடங்கள் தடைக்குள்ளாக்கப்பட்டு, தற்போது சர்வதேசப் போட்டிகளுக்கு திரும்பியுள்ள பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மொஹம்மட் ஆமிர், இங்கிலாந்தில், தனது மீள்வருகையில் மிரட்டியுள்ளார்.

பாகிஸ்தான், சமர்செற் அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டத்தில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், யுனிஸ் கானின் 104, அசாட் ஷஃபிக்கின் 80, ஷன் மசூட்டின் 62 ஓட்டங்களோடு எட்டு விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றபோது தனது ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தது.

இதனையடுத்து, சமர்செற் துடுப்பெடுத்தாட வந்தபோது பலத்த கரகோஷத்துடன் ஆமிர் பந்துவீச வந்தார். எனினும் அவர் வீசிய வந்த முதலாவது பந்து, நோபோல் என நடுவரினால் அறிவிக்கப்பட மைதானத்தில் பலத்த சிரிப்பு நிலவியிருந்தது.

எனினும் தனது ஸ்விங் பந்துவீச்சு மூலம் மார்க்கஸ் ட்ரெஸ்கொதிக்கை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் இங்கிலாந்து அணித்தலைவர் அலிஸ்டியர் குக்குகான எச்சரிக்கையை வழங்கியதுடன், அதன் பின் தொடர்ந்தும் கட்டுக்கோப்பாக பந்துவீசிய ஆமிர், அடம் ஹோஸை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்திருந்ததோடு, பின்னர், சமர்செற் அணித்தலைவர் பீற்றர் ட்ரீகோவையும் அபாரமாக போல்ட் செய்து ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

இவ்வாண்டில் ஆமிரின் முதலாவது முதற்தரப் போட்டி இதுவென்பதோடு, ஐந்து ஆண்டுகளில் ஆமிர் விளையாடிய ஐந்தாவது முதற்தரப் போட்டியாக இது அமைந்திருக்கையில், ஆமிரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தாலும், இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியின் முடிவில், மிரட்டும் பந்துவீச்சாளராக ஆமிர் மாறினால் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

குறித்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் 128 ஓட்டங்களுக்கு சமர்செற் சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்ததோடு, தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில், அஸார் அலி 50, அசாட் ஷஃபிக் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .