2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 10 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.

அபு தாபியில் நடைபெற்ற இங்கிலாந்துடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றிருந்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். இங்கிலாந்து சார்பாக, காயமடைந்த ஜேஸன் றோயை சாம் பில்லிங்ஸ் பிரதியிட்டிருந்தார்.

இந்நிலையில், நிதானமாக ஆரம்பித்த இங்கிலாந்து ஜொனி பெயார்ஸ்டோவை 13 (17), ஜொஸ் பட்லரை 29 (24) ஓட்டங்களுடன் குறிப்பிட்ட இடைவெளிகளில் அடம் மில்ன், இஷ் சோதியிடம் இழந்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மலானின் 41 (30), மொயின் அலியின் ஆட்டமிழக்காத 51 (37) ஓட்டங்களுடன் இனிங்ஸை நகர்த்திய இங்கிலாந்து, டிம் செளதியிடம் மலான் வீழ்ந்த நிலையில், ஜேம்ஸ் நீஷத்திடம் வீழ்ந்த லியாம் லிவிங்ஸ்டோனின் 17 (10) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில், டிம் செளதி 4-0-24-1, அடம் மில்ன் 4-0-31-1, இஷ் சோதி 4-0-32-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு, 167 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, கிறிஸ் வோக்ஸிடம் முதலாவது, மூன்றாவது ஓவர்களிலேயே மார்டின் கப்தில், வில்லியம்சனை இழந்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த டரைல் மிற்செல், டெவோன் கொன்வே ஆகியோர் இனிங்ஸை நகர்த்திய நிலையில், 46 (38) ஓட்டங்களைப் பெற்ற கொன்வே, அடுத்து வந்த கிளென் பிலிப்ஸை 14ஆவது, 16ஆவது ஓவர்களில் லியாம் லிவிங்ஸ்டோன் கைப்பற்றினார்.

எனினும், ஜேம்ஸ் நீஷமின் 27 (11), டரைல் மிற்செல்லின் ஆட்டமிழக்காத 72 (47) ஓட்டங்களுடன் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நியூசிலாந்து வெற்றியிலக்கையடைந்தது.

பந்துவீச்சில், லிவிங்ஸ்டோன் 4-0-22-2 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.

இப்போட்டியின் நாயகனாக மிற்செல் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .