2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய பாகிஸ்தான் குழு

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 06 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில் பாகிஸ்தானின் ஆண், பெண்கள் அணிகள் பங்குகொள்ளவுள்ள நிலையில், அவ்வணிகளுக்கான பாதுகாப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக, மூன்று பேர் கொண்ட பாதுகாப்புத் தூதுக்குழுவொன்றை பாகிஸ்தானிய அரசாங்கம் நியமித்துள்ளது.

இந்தக் குழு, நாளை திங்கட்கிழமை இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளதோடு, பாதுகாப்புத் தொடர்பான இறுதி முடிவை, எதிர்வரும் புதன்கிழமை எடுக்குமென அறிவிக்கப்படுகிறது.

இந்தத் தொடரில் பங்குபற்றுவதற்கான அனுமதியை, பாகிஸ்தான் அரசாங்கம் ஏற்கெனவே வழங்கியிருந்த போதிலும், முழுமையான பாதுகாப்புக் கிடைக்கும் வரை, தொடருக்குச் செல்வது குறித்த முடிவை எடுப்பதை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தள்ளிவைத்திருந்தது.

குறிப்பாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டி இடம்பெறவுள்ள தர்மசாலா அமைந்துள்ள ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் விர்பத்ரா சிங், அப்போட்டிக்கான பாதுகாப்பை வழங்குவது குறித்துச் சந்தேகம் வழங்கியிருந்தார். அத்தோடு, பாகிஸ்தான் விளையாடும் போட்டி, அங்கு இடம்பெறக்கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, மூன்று பேர் கொண்ட இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கையில், போதுமான பாதுகாப்புக் காணப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டால் மாத்திரமே, பாகிஸ்தான் அணிகள், இந்தியாவுக்குச் செல்லுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .