Shanmugan Murugavel / 2016 ஜூன் 28 , மு.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றின் இறுதி நாள்ப் போட்டிகளின் முடிவில், நடப்புச் சம்பியன்களான ஸ்பெய்ன் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டதோடு, கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்தால் இங்கிலாந்து வெளியேற்றப்பட்டிருந்தது.

இத்தாலி, ஸ்பெய்ன் அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் ஸ்பெய்னை தோற்கடித்த இத்தாலி, காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. போட்டியின் 33ஆவது நிமிடத்தில் இத்தாலிக்கு கிடைத்த ‘பிறீ கிக்’ கை ஈடர் உதைத்திருந்த நிலையில், அதை ஸ்பெய்னின் கோல்காப்பாளர் டேவிட் டீ கியா தட்டி விட, கோல்கம்பத்துக்கு அருகேயிருந்த ஜோர்ஜோ கெல்லீனி அதை கோலாக்கி தனது அணிக்கு முன்னிலை வழங்கியிருந்ததோடு, போட்டியின் இறுதி நிமிடங்களில் கிறாசியானோ பெல்லே, மேலுமொரு கோலைப் பெற்று, ஜேர்மனியுடனான காலிறுதிப் போட்டியில் இத்தாலியின் இடத்தை உறுதிப்படுத்தினார்.
2012ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஸ்பெய்னுடன் இறுதிப் போட்டியில் 4-0 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தமைக்கு பழிதீர்க்கும் முகமாக உக்கிரமாகவும் ஆடிய இத்தாலியின் கோல்பெறும் வாய்ப்புகள் ஐந்தை, டீ கியா அபாரமாக தடுத்திருந்தால், இல்லாவிடில், கடந்த உலகக் கிண்ணத்தில் பிரேசிலுடனான போட்டியில் ஜேர்மனியால் கோல்கள் எண்ணப்பட்டது போல இத்தாலியும் கோல்களை எண்ணியிருக்கும். போட்டியின் இறுதிக் கணத்தில், இத்தாலி தடுப்பாட்டத்தையே கையாண்டிருந்த நிலையில், அன்றே இனியஸ்டா, ஜெராட் பீகேயின் உதைகளை 40 வயதான கிழட்டுச் சிங்கமான இத்தாலி அணியின் தலைவரும் கோல்காப்பாளருமான ஜல்லூஜி புபான் அபாரமாக தடுத்திருந்ததுடன், ஸ்பெய்ன் அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸ் உதைத்த பந்து கோல்கம்பத்துக்கு வெளியால் சென்றிருந்தது.

மறுபக்கம், கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்திடம் இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் 2-1 என்ற கோல்கணக்கில் தோற்று வெளியேறிய இங்கிலாந்து, 1950ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் அமெரிக்காவால் வெளியேற்றப்பட்டதுக்கு பின்னர், தனது மோசமான பெறுதியை பதிவு செய்து கொண்டது.
மேற்படி போட்டியின் நான்காவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை இங்கிலாந்து அணியின் தலைவர் வெய்ன் ரூனி கோலாக்க அவ்வணி முன்னிலை பெற்றபோதும், அடுத்த நிமிடத்துக்குள்ளேயே, தங்களது வழமையான பாணியில், நீண்ட தூரமாக பந்தை எறிய, கோல்கம்பத்துக்கு அருகிலிருந்த றக்னர் சிகுர்ட்ஸ்சன் அதைக் கோலாக்கியதன் மூலம் கோல்எண்ணிக்கையை சமன் செய்த ஐஸ்லாந்து, போட்டியின் 18ஆவது நிமிடத்தில், இங்கிலாந்து அணியின் கோல்காப்பாளர் ஜோ ஹார்ட், தனது கைகளினூடாக கொல்பென் சிகோதோர்சன்னின் உதையினை விட, தனது இரண்டாவது கோலையும் பெற்ற ஐஸ்லாந்து, அந்த வெற்றிக் கோலுடனேயே போட்டியை முடித்துக் கொண்டது.
இந்நிலையில், உலகத்தில் 34ஆவது அணியாக தரவரிசையில் இருந்து, யூரோ 2016 கிண்ண அணிகளில் குறைந்த தரவரிசையில் இருக்கின்ற ஐஸ்லாந்திடம் தோல்வியடைந்தமையையடுத்து, கடந்த நான்கு வருடங்களாக இங்கிலாந்து அணியின் முகாமையாளராக இருந்து, பெரிய தொடர் போட்டிகள் 11இல் மூன்றில் மட்டுமே வெற்றியைப் பெற்றுக் கொடுத்த இங்கிலாந்து அணியின் முகாமையாளர் றோய் ஹொட்ஜ்சன், தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago