2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஐ.அ பகிரங்க டென்னிஸ்: தடுமாறி வென்றார் ஜோக்கோவிச்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் டென்னிஸ் போட்டிகளில், ஓராண்டின் இறுதி கிரான்ட் ஸ்லாம் தொடரான ஐக்கிய அமெரிக்க டென்னிஸ் தொடர், அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த நிலையில், முதல்நாள் போட்டிகளில் நடப்புச் சம்பியனான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தாது, தடுமாற்றத்துடன் வெற்றிபெற்றார்.

போலந்தின் ஜேர்ஸி ஜனாவிக்ஸை எதிர்கொண்ட ஜோக்கோவிச், முதலாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். எனினும், முதலாவது செட்டிலேயே அவரது வலது கையில் உபாதை ஏற்பட்டு, மருத்துவ உதவியை நாடியிருந்தார். பின்னர், சில தடவைகள், அவரது மூட்டுப்பகுதியை அவர் பிடித்துக் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக இரண்டாவது செட்டை, 5-7 என்ற கணக்கில் அவர் இழந்தார். மூன்றாவது செட்டில் மீண்டும் சிறப்பாக விளையாடிய அவர், 6-2 என்ற கணக்கிலும் அடுத்த செட்டை 6-1 என்ற கணக்கிலும் வென்று, இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரைக் கைப்பற்றிய பின்னர், விம்பிள்டன் போட்டிகளிலும் றியோ ஒலிம்பிக்கிலும் ஆரம்பத்திலேயே தோல்வியைச் சந்தித்து வெளியேறிய ஜோக்கோவிச், தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் தொடராக இதைப் பயன்படுத்த எண்ணியிருந்த நிலையில், முதலாவது சுற்றிலேயே அவர் சிறிது தடுமாறியமை, அவரது உடற்றகுதி குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதேவேளை, ஏனைய போட்டிகளில் ஐந்தாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், உஸ்பெக்கிஸ்தானின் டெனிஸ் இஸ்தோமினை எதிர்கொண்டு, 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார். 9ஆம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், பிரேஸிலின் றொகேரியோ டுட்ரா சில்வாவை எதிர்கொண்டு 6-4, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்றார். 11ஆம் நிலை வீரரான பிரான்ஸின் ஜோ-வில்பிரட் சொங்கா, ஆர்ஜென்டீனாவின் குய்டோ அன்ட்ரேஓஸியை எதிர்கொண்டு 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

பெண்களில் 2ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், ஸ்லோவேனியாவின் பொலோனா ஹேர்கொக்கை எதிர்கொண்டு 6-0, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், உபாதை காரணமாக பொலோனா ஓய்வுபெற்றதால், கேர்பருக்கு வெற்றி கிடைத்தது. 3ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெய்னின் கார்பைன் முகுருஸா, பெல்ஜியத்தின் எலைஸ் மேர்டென்ஸை எதிர்கொண்டு, 2-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். 10ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்னெட்ஸோவா, இத்தாலியின் பிராங்செஸ்கா ஷியாவோனை எதிர்கொண்டு 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .