2025 மே 19, திங்கட்கிழமை

ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்திய கொல்கத்தா

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 26 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) நடப்பாண்டு பருவகாலமானது இன்று ஆரம்பித்த நிலையில், மும்பையில் இன்று நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் நடப்புச் சம்பியன்களான சென்னை சுப்பர் கிங்ஸை கொல்கத்தா நைட் றைடர்ஸ் வீழ்த்தியது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தாவின் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை, ஆரம்பத்திலேயே ருத்துராஜ் கைகவாட், டெவோன் கொன்வேயை உமேஷ் யாதவ்விடம் பறிகொடுத்தது. பின்னர் வந்து ரொபின் உத்தப்பா 28 (21) ஓட்டங்களைப் பெற்றபோதும், அவர், அம்பாதி ராயுடு, ஷிவம் டுபேயை அடுத்தடுத்து இழந்து சிக்கலான நிலையில் சென்னை இருந்தது.

இந்நிலையில், மகேந்திர சிங் டோணியின் ஆட்டமிழக்காத 50 (38), அணித்தலைவர் இரவீந்திர ஜடேஜாவின் ஆட்டமிழக்காத 26 (28) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களையே பெற்றது. பந்துவீச்சில், உமேஷ் யாதவ் 4-0-20-2, வருண் சக்கரவர்த்தி 4-0-23-1, சுனில் நரைன் 4-0-15-0 என்ற சிறப்பான பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு, 132 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, அஜின்கியா ரஹானேயின் 44 (34) ஓட்டங்கள் மூலம் வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்தபோதும், டுவைன் பிராவோவிடம் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எவ்வாறாயினும், 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பிராவோ 4-0-20-3 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.

இப்போட்டியின் நாயகனாக உமேஷ் யாதவ் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X