2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஓய்வுபெறுகிறார் மக்கலம்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம், அடுத்தாண்டு பெப்ரவரியுடன், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.   இன்று விடுத்த விசேட அறிவிப்பிலேயே அவர், இதனை வெளிப்படுத்தினார்.

நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ள 2ஆவது போட்டியுடனேயே அவர், ஓய்வுபெறவுள்ளார். இதன் மூலம், மார்ச் மாதம் இந்தியாவில் ஆரம்பிக்கவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில், மக்கலம் பங்குபற்றமாட்டார்.

அவுஸ்திரேலியத் தொடர்வரை காத்திருந்து, 2ஆவது போட்டியின் முடிவிலேயே ஓய்வுபெறுவதை அறிவிக்க விரும்பியதாகத் தெரிவித்த பிரென்டன் மக்கலம், எனினும், உலக இருபதுக்கு-20 தொடருக்கான குழாத்தினை அறிவிக்க வேண்டியிருப்பதால், தனது ஓய்வை அறிவிப்பதாகத் தெரிவித்தார். சொந்த மண்ணில் ஓய்வுபெறும் விருப்பம் காரணமாகவே, அத்தொடரில் ஓய்வுபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்ரோஷமான, ஆனால், வாய்ச்சண்டைகளற்ற கிரிக்கெட்டை விளையாடும் நடைமுறையை நியூசிலாந்தில் ஏற்படுத்திய மக்கலம், இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில், அவ்வணியை இறுதிப் போட்டியை வரை வழிநடத்தியிருந்தார்.

இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 11 சதங்கள், 31 அரைசை;சதங்கள் உள்ளடங்கலாக 38.48 என்ற சராசரியில் 6,273 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 2013ஆம் ஆண்டு முதல் அணித்தலைவராகச் செயற்படும் அவர், அக்காலப்பகுதியில், 29 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள், 7 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 45.31 என்ற சராசரியில் 2,175 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

254 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், 5 சதங்கள், 31 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக, 30.30 என்ற சராசரியில், 95.03 என்ற ஸ்ட்ரைக் ரேட்-இல், 5,909 ஓட்டங்களைப் பெற்றுள்ள அவர், 71 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில், 2 சதங்கள், 13 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 136.21 என்ற ஸ்ட்ரைக் ரேட்-இல், 35.66 என்ற சராசரியில் 2,140 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

மக்கலத்துக்குப் பதிலாக, உலகின் முதல்நிலை டெஸ்ட் வீரரான கேன் வில்லியம்ஸன், புதிய தலைவராக நியமிக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .