2025 மே 14, புதன்கிழமை

ஓர் இடி முழக்க சகாப்தம்: போற்றினார் கிரெக் சாப்பல்

Editorial   / 2025 மே 13 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய அணியின் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஓர் இடி முழக்கம் போன்ற சகாப்தத்தைக் குறிக்கிறது என்றும், அவருடைய காலக்கட்டம் மன உறுதி, தீரம் மற்றும் துணிச்சலால் நிரம்பியது என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவரும், இந்திய முன்னாள் பயிற்சியாளருமான கிரெக் சாப்பல் வானளாவ புகழ்ந்துள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் அவர் எழுதியதில் இருந்து சில பகுதிகள் இதோ:

சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டையே உருமாற்றம் செய்த ஓர் ஆளுமையின் அத்தியாயத்தை விராட் கோலியின் ஓய்வு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஓய்வறை, கிரிக்கெட் களச் செயல்பாடு என்று கிரிக்கெட் கலாச்சாரத்தையே மாற்றியதில் சச்சின் டெண்டுல்கரையும் கடந்து விஞ்சி நிற்பவர் விராட் கோலி.

விராட் கோலி ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டின் ஒளியும் உஷ்ணமும் நிறைந்த இருதயமாகத் திகழ்ந்தார். அவர் வெறுமனே ஓட்டங்களை மட்டும் குவிக்கவில்லை. எதிர்பார்ப்புகளுக்கு மறுவிளக்கமளிப்பது போன்றது அவரது கிரிக்கெட் வாழ்வு. மரபுகளை கேள்விக்குட்படுத்தினார்.

 

21-ம் நூற்றாண்டின் சுய உறுதிப்பாடுடைய இந்தியாவின் குறியீடாகத் திகழ்கிறார். அவரது ஓய்வு புள்ளி விவரங்களில் சூன்யத்தை ஏற்படுத்துவதோடு ஆற்றல் மட்டத்தில் ஒரு பூகம்ப மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனெனில் அவரைப் போன்ற இன்னொருவர் இனி இந்திய அணிக்கு வருவது கடினம்.

அயல்நாடுகளில் இந்திய கிரிக்கெட் மரியாதைக்குரிய அடிபணிதலோடு ஆடிய காலக்கட்டம் இருந்தது. நல்ல உத்திகளுடன் திறமையுடன் ஆடுவார்கள், ஆனால் உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மை இருந்து வந்தது. இந்த மனப்பான்மை படிப்படியாக மாறியது, முதலில் கங்குலி இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய முதுகெலும்பைக் கொடுத்தார். எம்.எஸ்.தோனி ஓர் உணர்வு ரீதியாக ஒரு தொடர்பற்ற ஒரு தொழில்பூர்வ தலைமைத்துவத்தில் வெள்ளைப்பந்தில் இந்திய கிரிக்கெட்டை ஆதிக்க நிலைக்குக் கொண்டு வந்தார்.

ஆனால் கோலி? கோலிதான் தீயை மூட்டினார். பழைய நூலைக் கிழித்து புது நூலை எழுதிய ஆசிரியராகத் திகழ்ந்தார். இவர் தலைமையில்தான் இந்திய அணி அன்னிய மண்ணில் சவாலாக மட்டும் திகழ்வதோடு நின்று போகாமல் வெற்றி பெறும் எதிர்பார்ப்பை வழங்கியது. ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலியர் என்றால் அது விராட் கோலிதான். வெள்ளை உடையில் நாங்கள் இதுவரை கண்டிராத போர் வீரன் விராட். ஓர் அங்குலம் கூட விட்டுக் கொடுக்காதவர்.

கோலியின் பாரம்பரியம் என்று பேசப்படும் அளவுக்கு இரண்டு தொடர்கள் அவரை வரையறுத்தன. அவரது ஆளுமை கிரிக்கெட்டின் பாரம்பரிய மகத்துவம் நிரம்பிய இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய குணாம்சமாக வெளிப்பட்டது. 2014-ல் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் அவரை தன் லேட் ஸ்விங்கினால் பலவீனங்களை அம்பலப்படுத்தினார், ஆனால் கோலிக்குத் தோல்வி என்பது உரம் போன்றது. அவர் துவளவில்லை, தன் யு-19 பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத்தை அணுகினார். உத்தி ரீதியான பழுதுகளை நீக்கினார். சச்சின் டெண்டுல்கரும் உதவினார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு இவற்றின் பலனால் ஒரு கிரேட் பேட்டர் மட்டுமல்ல ஒரு சிறந்த மனிதராகவும் கோலி உருவெடுத்தார்.

இங்கிலாந்துக்கு அவர் 2018-ல் வந்தது மீட்புப் புராணம் என்றே கூற வேண்டும். எட்ஜ்பாஸ்டனில் முதல் டெஸ்ட் போட்டியில் கோலி உன்னதமான 149 ஓட்டங்களை எடுத்தார். ஒரு முறை அவரது பொறுமை, உத்தி ஆகியவற்றிற்கு சோதனைக் களமாக இருந்ததை தனக்கு லாவகமாக மாற்றினார். இதே டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த 50 ஓட்டங்களையும் குறைத்து மதிப்பிட முடியாது. 5 டெஸ்ட் போட்டிகளில் 593 ஓட்டங்களை குவித்தார். 59.30 சராசரி. 2018-19-ல் கோலி ஆஸ்திரேலியாவுக்கு அணித்தலைவராக வந்தார்.

தங்களால் வெற்றியைச் சாதிக்க முடியும் என்று நம்பிய அணியுடன் வந்தார் வென்றார். புஜாராதான் அந்தத் தொடரின் ஹீரோ என்றாலும் பெர்த்த் போன்ற அரக்கத்தனமான பிட்சில் கோலி எடுத்த 123 ஓட்டங்கள் பல யுகங்களுக்கும் மறையாத ஒரு இன்னிங்ஸ். இந்தியா 2-1 என்று தொடரை வென்றது. காலங்காலமாக இருந்து வந்த தாழ்வு மனப்பான்மையைக் குழிதோண்டிப் புதைத்தார் விராட் கோலி.

இதுவரை எந்த இந்திய அணியின் தலைவர் ஓர் அணியை இவ்வளவு வலுவான வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு வழிநடத்தியதில்லை. டெண்டுல்கருக்குப் பிறகு, ஒவ்வொரு கண்டத்திலும் இவ்வளவு தெளிவாக ஆதிக்கம் செலுத்திய வேறு பேட்ஸ்மேன் கோலியைத் தவிர வேறு எவரும் இல்லை. கோலியின் கிரேட்டஸ்ட் இன்னிங்ஸ் ஓட்டங்களை விடவும் உன்னதமானது. அடிலெய்டில் மிகப்பெரிய (350க்கும் மேலான) இலக்கை விரட்டியதில் கோலியின் ஆரம்ப கால திட்ட வரைபடம் கண்ணுக்குத் தெரிந்தது.

சென்சூரியனில் எடுத்த 153, 2016-ல் வெஸ்ட் இண்டீஸில் எடுத்த 200, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 254 என்று அவரது திறமைகளின் கதைகள் கிளைபரத்தி வானுயர வளர்ந்தது. அவர் ரிவர்ஸ் ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற புதுமைகள் இன்றியே மரபான கிரிக்கெட் ஆட்ட உத்தியிலேயே டென்னிஸ் போன்ற ஆக்ரோஷத்தை அவரால் காட்ட முடியும், டைமிங், ஸ்ட்ரெய்ட் பேட் என்று அவர் ஆதிக்கம் அமைந்தது...

அவர் தவறுகள் இழைத்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்தவுடன் வாழ்க்கை முறையில் கட்டுக்கோப்பாக இருந்தார். தனக்குத்தானே மிகவும் நேர்மையாக இருந்தார். டயட், ட்ரெய்னிங், மனநிலை என்று தெளிவுக்குத் திரும்பினார். இவற்றையெல்லாம் அவர் விடாப்பிடியாகக் கடைபிடித்து தொழில்முறையாகவும் உடல் தகுதியின்றி வேறெதுவும் இல்லை என்ற ஒரு வற்புறுத்தலான பயிற்சி, இரும்பு மனம் என்று கோலி நவீன இந்திய கிரிக்கெட் வீரருக்கான மாதிரி வரைபடமாக மாறினார்...

ஆம். சச்சின் டெண்டுல்கர் ஒரு ஜீனியஸ், ஆம் தோனி ஒரு பெரிய தந்திரோபாயக்காரர், கூல் பினிஷர். ஆனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மகத்தான அங்கீகாரத்தில் கோலிதான் செல்வாக்கு மிக்க வீரராகத் திகழ்கிறார். ஏன் என்றால், அவர் ஆட்டத்தின் முடிவுகளை மட்டும் மாற்றவில்லை, மனநிலைகளை மாற்றியவர்.

கிங் கோலி என்ற வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் அவர் ஆட்சி செலுத்தினார். அவரது கர்ஜனை ஓய்ந்த பிறகும் நீண்ட காலத்திற்கு உணரப்படும். அனைவரும் கிங் கோலியை புகழ்கின்றனர். ஆதிக்கமும், கவுரவமும் ஒருங்கே நடக்க முடியும் என்று எங்களுக்கெல்லாம் நம்பிக்கை ஊட்டியதற்காக மிக்க நன்றி விராட் என்று அந்தப் பத்தியில் கிரெக் சாப்பல் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X