2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

குசால், சீக்குகே அதிரடி: இலங்கைக்குத் தொடர் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 19 , மு.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில், குசால் பெரேராவின் அதிரடியான சதம், சீக்குகே பிரசன்னவின் சிறப்பான சகலதுறைப் பெறுபேறுகளின் துணையோடு, இலங்கை அணிக்கு இலகுவான வெற்றி கிடைத்ததோடு, தொடரையும் 2-0 என்ற கணக்கில் அவ்வணி கைப்பற்றியது.

நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 377 ஓட்டங்களைக் குவித்தது. முதலாவது விக்கெட்டுக்காக 26.2 ஓவர்களில் 147 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில், மூன்றாமிலக்கத் துடுப்பாட்ட வீரராகக் களமிறக்கப்பட்ட சீக்குகே பிரசன்னவும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குசால் பெரேராவும், 15.2 ஓவர்களில் 165 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
துடுப்பாட்டத்தில் குசால் பெரேரா 135 (128), சீக்குகே பிரசன்ன 95 (46), தனுஷ்க குணதிலக 63 (78) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் டிம் முர்தக் 3, பரி மக்கார்த்தி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

378 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 136 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்த அவ்வணி, 9 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், இறுதி விக்கெட்டுக்காக 6.2 ஓவர்களில் 53 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தன.
துடுப்பாட்டத்தில் அன்டி மக்பிரின் 79 (64), ஸ்டுவேர்ட் பொய்ன்டெர் 36 (50), ஜோன் அன்டர்சன் 34 (45) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சுரங்க லக்மால் 4, சீக்குகே பிரசன்ன 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இத்தொடரின் நாயகனாக, முதலாவது போட்டியில் அதிரடியான சகலதுறைப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய தசுன் ஷானக தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .