Shanmugan Murugavel / 2016 ஜூன் 22 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் கோப்பா அமெரிக்கா தொடரில், ஆர்ஜென்டீன அணிக்கும் அமெரிக்க அணிக்குமிடையிலான அரையிறுதிப் போட்டியில், சாதனை வீரர் லியனொல் மெஸ்ஸியின் துணையோடு, ஆர்ஜென்டீன அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
இதுவரை 14 தடவைகள் கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை வென்றுள்ள ஆர்ஜென்டீன அணி, 1993ஆம் ஆண்டுக்குப் பின்னர் இத்தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றிருக்கவில்லை.
இந்நிலையிலேயே, அமெரிக்காவுக்கு எதிராக என்.ஆர்.ஜி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியில், தனது முழுமையான திறமையை, அவ்வணி வெளிப்படுத்தியது. போட்டியில் 3ஆவது நிமிடத்திலேயே ஆர்ஜென்டீனாவின் எஸெகியெல் லவெஸ்ஸி பெற்றுக் கொடுத்த கோலினால் 1-0 என்ற கோல் முன்னிலையைப் பெற்ற ஆர்ஜென்டீனா, 32ஆவது நிமிடத்தில் மெஸ்ஸியின் சாதனைக் கோலுடன், 2-0 என்ற முன்னிலையைப் பெற்றது.
இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து சிறப்பாட்டத்தை வெளிப்படுத்திய அவ்வணி சார்பாக 50ஆவது நிமிடத்திலும் 86ஆவது நிமிடத்திலும், கொன்ஸலோ ஹிகுவெய்னால் பெறப்பட்ட கோல்களால், 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
போட்டியின் 67 சதவீதமான நேரத்தில் பந்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஆர்ஜென்டீனா, கோல் கம்பத்தை நோக்கி 8 உதைகளை உதைத்திருந்தது. அத்தோடு, கோல் கம்பத்துக்கு வெளியே, 2 தடவைகள் உதைத்திருந்தது. ஆனால், ஆர்ஜென்டீனாவால் முழுமையாக அழுத்தத்துக்குள்ளாக்கப்பட்ட அமெரிக்க அணி, எந்தவொரு உதைகளையும் கோல் கம்பத்தை நோக்கி உதைத்திருக்கவில்லை.
இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றமையின் மூலம், அதிக தடவைகள் கோப்பா அமெரிக்கக் கிண்ணத்தை வென்ற அணி என்ற உருகுவேயின் சாதனையைச் சமப்படுத்தும் வாய்ப்பு, ஆர்ஜென்டீனாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி பெற்றுக்கொடுத்த கோல், அவரது சர்வதேச கால்பந்தாட்ட வாழ்வில் அவர் பெற்ற 55ஆவது கோலாகும். தனது 112ஆவது போட்டியில் இந்தக் கோலைப் பெற்ற மெஸ்ஸி, 78 போட்டிகளில் 54 கோல்களைப் பெற்றிருந்த கப்ரியல் பட்ஸ்டுட்டாவின் ஆர்ஜென்டீன சாதனையையே முறியடித்தார்.
ஆர்ஜென்டீன தேசிய அணிக்காக 2005ஆம் ஆண்டு தனது அறிமுகத்தை மேற்கொண்ட மெஸ்ஸி, அப்போட்டியில் மாற்று வீரராகக் களமிறக்கப்பட்டுச் சில நிமிடங்களிலேயே, சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை இடம்பெறவுள்ள கோப்பா அமெரிக்காவின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், கொலம்பிய அணியும் சிலி அணியும் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணியும் ஆர்ஜென்டீனாவும் ஜூன் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதவுள்ளதோடு, இப்போட்டியில் தோல்வியடையும் அணியும் அமெரிக்க அணியும், 3ஆவது இடத்துக்கான போட்டியில் 26ஆம் திகதி திகதி மோதவுள்ளன.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago