2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கிரிக்கெட்டும் பெண்களும் கிறிஸ் கெயிலும் அவதூறுகளும்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 05 , பி.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

ஆரம்பகாலத்திலிருந்தே, ஆண்களின் விளையாட்டாகக் கருதப்பட்டுவந்த கிரிக்கெட் போட்டிகள், பெண்களைத் தம்பக்கம் இழுப்பதற்குத் தடுமாறியே வந்திருக்கிறது. கிரிக்கெட்டின் விவரிப்பே, 'கனவான்களின் விளையாட்டு" என, ஆண்களை மையப்படுத்தியதாகவே இருந்தது.

எனினும், அண்மைக்காலத்தில் பெண்களின் கிரிக்கெட் போட்டிகள் அதிகரித்திருக்கின்றன. பெண் பார்வையாளர்களும் அதிகரித்திருக்கிறார்கள். இதன் விளைவாக, பெண்கள் உலகக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறுவதோடு, பெண்களுக்கான பிக் பாஷ் லீக் தொடரொன்று ஆரம்பிக்குமளவுக்கு, முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது. ஆனால், இவ்விளையாட்டு, உலகிலுள்ள ஏனைய பல விடயங்களைப் போலவே, ஆண்களால் ஆளப்படுகின்ற, ஆண்களால் கட்டுப்படுத்தப்படுகின்ற ஒரு விளையாட்டாகவே இருந்துவருகிறது. அதை மாற்றுவதற்கான பல்வேறுபட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன.

வெறுமனே கவர்ச்சிக்காக பெண் ஊடகவியலாளர்கள், கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்பட, ஆண்களின் கிரிக்கெட் போட்டிகளில், முன்னாள் கிரிக்கெட் வீராங்கனைகள் அல்லது தொழில்முறை பெண் ஊடகவியலாளர்கள், தங்கள் பங்களிப்புகளை வழங்க ஆரம்பித்தனர்.இதனொரு கட்டமாகவே, பிக் பாஷ் லீக் போட்டிகளிலும், பெண் ஊடகவியலாளர்கள், தங்கள் பங்களிப்புகளை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் தான், ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கும் மெல்பேண் றெனிகேட்ஸ் அணிக்குமிடையிலான போட்டியில், மெல்பேண் சார்பாக விளையாடிய கிறிஸ் கெயில், ஆட்டமிழந்து வெளியேறிய பின், பெண் ஊடகவியலாளரான மெல் மக்லாப்ளின், அவரை நேர்முகம் கண்டிருந்தார்.

எவ்வாறு அதிரடியாகத் துடுப்பெடுத்தாடினார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'நான் வந்து, உங்களோடு நேர்காணலொன்றை வைத்துக் கொள்ளவும் விரும்பினேன். அந்தக் காரணத்தால் தான் நான் இங்கு காணப்படுகிறேன். உங்கள் கண்களை முதற்தடவையாகப் பார்ப்பதற்கு. அது மிகவும் சிறப்பானது. இந்தப் போட்டியை நாங்கள் வெல்லலாம் என நம்புகிறேன், அதன் பின், (சேர்ந்து) மது அருந்தலாம்" என்றார். இந்தப் பதிலை அளிக்கும் போது, அப்பதிலை விரும்பவில்லை என்பதை மக்லாப்ளின் வெளிப்படுத்த, 'வெட்கப்படாதே, பேபி" என கிறிஸ் கெயில் தெரிவித்தார். இது தான், இப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பான சர்ச்சைகளுக்குப் பதிலளித்த கிறிஸ் கெயில், அது வெறுமனே நகைச்சுவை என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், அதில் நகைச்சுவையைக் காணமுடியவில்லை. மக்லாப்ளினின் கருத்துப்படி, அந்தப் பதிலால், தான் மிகவும் அசூசையாக உணர்ந்ததாகவும் அவமானகரமானதாக உணர்ந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

கெயிலைப் போன்றே பலரும், அது வெறும் நகைச்சுவை என, கெயிலை நியாயப்படுத்த முயன்றிருக்கின்றனர். ஆனால், அது நகைச்சுவை கிடையாது, மாறாக, பெண்களை இழிவுபடுத்தும் கொச்சையான செயற்பாடு மாத்திரமே. பெண்ணொருவரை ஆணும், ஆணொருவரை பெண்ணும் தங்களுடைய எதிர்ப்பால் கவர்ச்சியின் காரணமாக, விரும்ப முடியும், அதை வெளிப்படுத்தவும் முடியும். ஆனால், மக்லாப்ளின் செய்து கொண்டிருந்தது, தொழில்முறையான பணி. நேர்காணுவதென்பது, அவருடைய தொழில். கிரிக்கெட் விளையாடுவதென்பது, கிறிஸ் கெயிலின் தொழில். தன்னுடைய தொழில்முறையான பணியைச் செய்துகொண்டிருந்த ஒருவரிடம், காதல் வார்த்தைகளைப் பயன்படுத்துவதென்பது, அதுவும், நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பயன்படுத்துவதென்பது, பெண்களை இன்னமும் போகப் பொருளாகப் பார்க்கும் மனநிலையையே வெளிப்படுத்தி நிற்கிறது. இன்னமும் அவர்களை, தொழில் நிபுணர்களாக மதிக்கும் பண்பை, இன்னமும் பெற்றுக் கொள்ளாத அது வெளிப்படுத்துகிறது.

பெண் தலைமையதிகாரி, ஆண் ஊழியரொருவரை அழைத்து, 'இன்று சமர்ப்பிக்க வேண்டிய செயற்றிட்டம் தயாராகிவிட்டதா?" என்று கேட்கும்போது, அதற்கான பதிலாக, அந்தச் செயற்றிட்டம் தொடர்பான பதிலே இருக்க வேண்டுமே தவிர, அது தொடர்பான பதிலை அளிக்காமல், இரவு மது அருந்தச் செல்வோமா எனக் கேட்பது, பதிலாக அமையாது. அவ்வாறு யாரும் கேட்கப் போவதும் இல்லை. உயரதிகாரியாக இருக்கும்போது, அவரின் தொழில் நிபுணத்தன்மையை அல்லது அதிகாரத்தை மதிக்கும் போது, ஊடகவியலாளர் ஒருவர், தனது தொழிலைச் செய்யும்போது மாத்திரம், நகைச்சுவை என்ற பெயரில் வசைகளையும் அவதூறுகளையும் பாலியல் ரீதியான கருத்தாடல்களையும் மேற்கொள்வது, எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதல்ல.

அத்தோடு, இதுவொன்றும் முதற்தடவையுமல்ல. இதற்கு முன்னர், போட்டியின் ஆடுகளம் பற்றிக் கேட்ட ஊடகவியலாளரிடம், பாலியல் ரீதியான பதிலை வழங்கியவரும் இதே கெயில் தான். பிக் பாஷ் லீக் தொடருக்காக வாழ்த்துத் தெரிவித்த ஊடகவியலாளரை, தன்னோடு அழைத்தவரும் இதே கெயில் தான். ஆகவே, தனித்த ஒரு சம்பவமாக இதைக் கருதிவிட முடியாது என்பது தான், வருத்தமானதும் கவனிக்க வேண்டுமானதுமான விடயமாக இருக்கிறது.

இவ்விடயத்தில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையையும் பிக் பாஷ் லீக் ஏற்பாட்டாளர்களையும் பாராட்டி ஆக வேண்டும். இச்சம்பவம் இடம்பெற்ற உடனேயே, அதைக் கண்டித்ததோடு, கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சதர்லான்ட், அதை 'தொல்லைஃதுன்புறுத்தல்" என வர்ணித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கெயிலுக்கு, 10,000 அமெரிக்க டொலர் அபராதத்தை, அவரது அணி விடுத்திருக்கிறது. அத்தோடு, போட்டியின் ஒளிபரப்பாளரான டென் ஸ்போர்ட்ஸ், கிறிஸ் கெயிலை இனிமேல் ஒளிபரப்பில் சேர்த்துக் கொள்வதில்லை என அறிவித்திருக்கிறது. இவை, வரவேற்கப்படக்கூடிய விடயங்கள்.

ஆனால், ஏற்கெனவே, பெண் பார்வையாளர்களைத் தம்வசம் இழுக்கக் கஷ்டப்படும் கிரிக்கெட், கிறிஸ் கெயில் போன்றவர்களாலும் அவர்கள் நகைச்சுவை எனக் கருதுபவற்றாலும், பெண்களைத் தம்வசம் இழுக்க இன்னமும் கஷ்டமாக உணரும் என்பதே உண்மை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .