2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிங் வோர்னி

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 11 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முருகவேல் சண்முகன்

கடந்த இரண்டு நாள்களாக எங்கு திரும்பினாலும் ஷேன் வோர்ன் குறித்த பேச்சாகவே 90கள், 2000ங்களின் ஆரம்பத்தையுடையவர்களின் பேச்சாக இருக்கின்றது.

ஆக, யார் இந்த வோர்ன்? ஏன் அவர் இவ்வாறு கொண்டாடப்படுகின்றார் என்ற 2கே கிட்ஸ்களின் கேள்விகளில் நியாயமில்லாமலில்லை. ஏனெனில், இன்றைய கால கட்டங்களில் விராட் கோலி, மகேந்திர சிங் டோணி உள்ளிட்டோர் நட்சத்திரங்களாகவே காட்சியளிக்கின்றனர்.

பொப் நட்சத்திரங்கள் கோலோச்சிய கால கட்டத்தில் அவர்களுக்கு ஈடிணையான நட்சத்திரமாகவே வோர்ன் காணப்பட்டிருந்தார். வோர்னின் தனிப்பட்ட வாழ்க்கையானது சிக்கலானதாகவே காணப்பட்டிருந்ததுடன், ஊக்கமருந்துச் சர்ச்சை, ஆட்டநிர்ணயக்காரர்களுக்கு தகவல் வழங்கியமை என சிக்கலானதாகவே காணப்பட்டபோதும் கிங் வோர்னியாகவே அவர் காணப்பட்டிருந்தார்.

களத்தில் சாதித்தவை தவிர களத்துக்கு வெளியேயான அவரது நடவடிக்கைகள் காரணமாகவே கிங்காக வோர்ன் காணப்பட்டிருந்தார். அதுவும் எமது நாட்டைப் பொறுத்த வரையில் 2000-இன் ஆரம்பங்களிலிருந்து எமது இரசிகர்களுக்கு நெருக்கமானவராகவே களத்துக்கும், களத்துக்கும் வெளியேயும் வோர்ன் காணப்பட்டிருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது யார் என்ற போட்டியில் முத்தையா முரளிதரனோடு வோர்ன் இருந்த நிலையில் களத்துக்குள் அறியப்பட்டிருந்ததோடு, 2004ஆம் ஆண்டு சுனாமியைத் தொடர்ந்து முரளிதரனின் அழைப்பையடுத்து இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வோர்ன், தனது சிறுவர்களுக்கான அறக்கட்டளை மூலம் உதவிகளை வழங்கியிருந்தார்.

இது தவிர களத்தில் அதிரடியாகச் செயற்படுபவராக இல்லாமல், மது அருந்தும், சிகரெட் புகையும், பீஸாக்களைச் சாப்பிடுபவர் போலவே வோர்ன் காணப்பட்டிருந்த நிலையில், அக்காலகட்டத்தில் அவுஸ்திரேலியாவின் சிறுவர்களும் அவரைப் பிரதிபலிக்கவே விரும்பியிருந்தனர்.

மூக்கில் கிறீம், நிறப்பூச்சு பூசப்பட்ட அரித்து வெட்டப்பட்ட தலைமுடி, தோடு என கவர்ச்சியாக காணப்பட்டிருந்த வோர்னை சிறுவர்கள் விரும்பியிருந்ததோடு, சிறுவர், பெரியோர் எனப் பாகுபாடு காட்டாமல் எவருக்கும் அவரவர் கோரும் இடங்களில் கையொப்பமிட்டிருந்து சாதாரணமானவர்களுக்கு நெருக்கமானதும் வோர்னைப் பலருக்கும் பிடித்துப் போக காரணமாயிற்று.

இவ்வாறான புகழை பிற்காலங்களில் அடைந்திருந்தாலும் வோர்னின் ஆரம்பம் சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. 1990ஆம் ஆண்டு ஒழுக்கக் காரணங்களால் அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட்டிலுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அகடமியிலிருந்து வோர்ன் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் 1992ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தனது 23ஆவது வயதில் இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் அறிமுகத்தை வோர்ன் மேற்கொண்டிருந்த நிலையில், அது ஞாபகப்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருக்கவில்லை. இந்தியாவின் ஒற்றை இனிங்ஸில் 150 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.

பிற்பட்ட காலங்களில் 708 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் வோர்ன் கைப்பற்றியபோதும், எப்போதும் இந்தியா மீது வோர்னால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஏனைய அனைத்து அணிகளுக்கெதிராகவும் 30க்கும் கீழான சராசரியை வோர்ன் கொண்டிருந்தபோதும், இந்தியாவுக்கெதிராக 47.18 என்ற சராசரியைக் கொண்டிருந்தார்.

கொழும்பில் 1992ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டே பிற்காலங்களில் வோர்ன் எவ்வாறு ஆகப் போகின்றார் என்பதைக் கோடிட்டுக் காட்டியிருந்தது.

பின்னர் 1993ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஆஷஸ் டெஸ்டொன்றின் தனது முதலாவது பந்தில், நூற்றாண்டின் சிறந்த பந்து என அடையாளப்படுத்தப்படும் பந்தை வோர்ன் வீசியிருந்தார். சிறந்ததோரு லெக்பிரேக்கான அப்பந்தானது, லெக் ஸ்டம்புக்கு வெளியே வீழ்ந்து, மைக் கேட்டிங்கைத் தாண்டிச் சென்று ஒஃப் ஸ்டம்ப்பின் முனையைப் பதம் பார்த்திருந்தது. இத்தொடரே வோர்னை நாயகனொருவராக மாற்றியிருந்தது.

அக்காலகட்டத்தில் அழிவடைந்து போய்க்கொண்டிருந்த லெக் ஸ்பின்னை மீண்டும் ஆயுதமாக்கிக் கொண்டு வந்த பெருமை வோர்னையே சாரும். அதன்பின்னர் ஒவ்வொரு அணியிலும் ஒவ்வொரு லெக்ஸ்பின்னர்கள் இடம்பெற்றதுடன், சிறுவர்கள் ஒவ்வொருவரும் வோர்னைப் போல பந்துவீச முயன்று கொண்டிருந்தனர்.

பின்னர் 1995ஆம் ஆண்டு சிக்கலில் வோர்ன் சிக்கியிருந்தார். ஆடுகள, வானிலைத் தகவலை இந்திய ஆட்டநிர்ணயக்காரரொருவருக்கு வழங்கியதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் வோர்னுக்கும், மார்க் வோக்கும் தண்டம் அறவிடப்பட்டிருந்தது. இதை கிரிக்கெட் சபை மறைத்திருந்ததோடும், மூன்றாண்டுக்ளுக்குப் பின்னர் ஊடகங்கள் வாயிலாக இது வெளிவந்திருந்தது.

வோர்னின் காலத்தில் கிளென் மக்ராத், பிரட் லீ, மைக்கல் கஸ்பரோவிச், ஜேஸன் கிலெஸ்பி, அன்டி பிச்செல் என தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்து அவர்கள் உருவாக்கிய அழுத்தத்தில் இலகுவாக வோர்ன் விக்கெட்டுகளைக் கைப்பற்றுகின்றார் என்ற ஒரு வாதம் இருக்கின்ற நிலையில், மறுபக்கமாக அவர்கள் கைப்பற்றியதை விடுத்து அவர்களின் காலத்தில் இவ்வளவு விக்கெட்டுகளை வோர்ன் கைப்பற்றினார் என்ற கருத்தும் நிலவுகின்றது. அதுவும் வழமையாக தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர்களே சாதித்த நிலையில், அவுஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளரொருவர் இவ்வளவு விக்கெட்டுகளைக் கைப்பற்றியது ஆச்சரியமாக நோக்கப்படுகிறது.

இந்நிலையில், வோர்னின் சமகாலத்து போட்டியாளரான முரளிதரனின் காலத்தில் இவ்வாறான பலம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் சமிந்த வாஸைத் தவிர வேறொருவரும் குறிப்பிடத்தக்கதாக இல்லாத நிலையில், அவரே அழுத்தத்தையும் வழங்கி அவரே விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டி இருந்தது. இதிலும், வேறு சொல்லிக் கொள்ளும்படியான பந்துவீச்சாளர்கள் வாஸைத் தவிர வேறு எவரும் இல்லாத நிலையில் முரளிதரனுக்கு கைப்பற்றுவதற்கு அதிக விக்கெட்டுகள் இருந்தன என்ற வாதமும் காணப்படுகின்றது.

இது தவிர, முரளிதரனுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது கை மடிப்பதானது ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டதை விட அதிகபட்சமாக இருந்தது என்ற முக்கியமான வாதமும் உண்டு. இதனுடன் ஒப்பிடுகையில் இலகுவான பந்துவீச்சுப்பாணியை வோர்ன் கொண்டிருந்தார்.

இவ்வாறாக வாதங்கள் இருக்கையில் பத்தியாளரைப் பொறுத்த வரையில் இருவருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆவர்.

1998ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரையில் தோட்பட்டை சத்திரசிகிச்சை, இந்தியாவுடனான போட்டிகள் காரணமாக வோர்னின் பெறுபேறுகள் வீழ்ச்சியடைந்திருந்தபோதும், 1999ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் ஆபத்தாந்தவனாய் வோர்ன் அமைந்திருந்தார்.

தொடர்ந்து 2000ஆம் ஆண்டு விளையாடிக் கொண்டிருக்கையிலேயே விஸ்டன் சஞ்சிகையால் நூற்றாண்டின் சிறந்த ஐந்து வீரர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டிருந்தார். பெயரிடப்பட்ட ஒரே பந்துவீச்சாளர் வோர்ன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்கு முன்பதாக தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியமைக்காக வோர்ன்னுக்கு அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடுவதற்கு ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டது. எடை குறைப்புக்காக தாயாரே குறித்த ஊக்கமருந்துள்ள மருந்தை வழங்கியதாக வோர்ன் குறிப்பிட்டிருந்தார். இத்துடன் வோர்னின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் காலம் முடிவுக்கு வந்திருந்தது.

மொத்தமாக 194 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய வோர்ன் 293 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

ஏனையோர் போலல்லாது அதிரடியான மீள்வருகையைப் புரிந்த வோர்ன் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதலாவது சுழற்பந்துவீச்சாளராக மாறியதுடன், 533ஆவது விக்கெட்டைக் கைப்பற்றுகையில் முரளிதரனைத் தாண்டி டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக மாறியிருந்தார்.

இதேவேளை, 2005ஆம் ஆண்டு 96 விக்கெட்டுகளை வோர்ன் கைப்பற்றிய நிலையில், ஆண்டொன்றில் பந்துவீச்சாளரொருவர் கைப்பற்றிய அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளைக் கைப்பற்றியபடி வோர்ன் தனது 37ஆவது வயதில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து வோர்ன் ஓய்வு பெற்றிருந்தார். அக்காலகட்டத்தில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக வோர்னே காணப்பட்டிருந்தார்.

இதேவேளை, வோர்ன் 145 டெஸ்ட் போட்டிகளில் 3,154 ஓட்டங்களையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், முக்கியமான கட்டங்களிலேயே வோர்னின் துடுப்பாட்டப் பங்களிப்புகள் கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்தர்ப்பத்தில் இதையும் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். வோர்ன் போன்றதொரு ஜாம்பவானின் காலகட்டத்தில் இருந்தமை காரணமாக வேறெந்த அணியிலும் தனித்த சுழற்பந்துவீச்சாளராக இடம்பெறக்கூடிய லெக்ஸ்பின்னர் ஸ்டூவர்ட் மக்கில்லுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு 11 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு வோர்ன் தலைமை தாங்கியிருந்தபோதும், அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் அணி கொண்டிருக்காத சிறந்ததொரு அணித்தலைவராக வோர்ன் நோக்கப்படுகின்றார். ஏனெனில், போட்டியின் தன்மையை ஊகித்தறிந்து சரியான கணிப்புகளை மேற்கொண்டதில் வோர்ன் தேர்ச்சி பெற்றவராக வோர்ன் காணப்பட்டிருந்தார்.

சர்வதேசப் போட்டிகளில் ஓய்வுக்குப் பின்னர் வர்ணனையாளராக இது வெளிப்பட்டிருந்தது. தவிர, இந்தியன் பிறீமியர் லீக்கின் ஆரம்பப் பருவகாலத்தில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்குத் தலைமை தாங்கியிருந்த வோர்ன், அவ்வணிக்கு முதற்பருவகாலத்திலேயே சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தார். இதில், றோயல்ஸில் இரவீந்திர ஜடேஜாவை அடையாளங்கண்டு அவரை இனங்காட்டியவர் வோர்ன் என்றால் மிகையாகாது.

அந்தவகையில், இவ்வாறான உயரங்களை எட்டிய வோர்ன் தாய்லாந்தின் கொஹ் சமுயில் சுற்றுலால சென்றிருந்தபோது, கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்திருந்தார். அவருக்குரிய மரணத்துக்கான காரணமாக மாரடைப்பு சந்தேகிக்கப்படுகின்றது. இறக்கும்போது அவருக்கு வயது 52 ஆகும்.

இறுதியாகக் கூட டெஸ்ட் போட்டிகளில் தான் அணிந்திருந்த தொப்பியை ஏலத்துக்கு விட்டு அதில் வந்த தொகையை அவுஸ்திரேலிய காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியிருந்தார்.

இதேவேளை, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சீட்டாட்டமான போக்கரில் தொழில்முறை ரீதியிலாக வோர்ன் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் உள்ள தெற்குப் புற அரங்கமானது தற்போது வோர்னின் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .