2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

கிரிக்கெட்டின் நவீன உலக ஜாம்பவான்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 01 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் நவீன உலக ஜாம்பவான்களாக தற்போதும் விளையாடிக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவின் தலைவர் விராட் கோலி, நியூசிலாந்தின் தலைவர் வில்லியம்ஸன், இங்கிலாந்தின் தலைவர் ஜோ றூட் ஆகியோர் நோக்கப்படுகின்றனர்.

அந்தவகையில், குறித்த பட்டியலானது துடுப்பாட்டவீரர்களையே உள்ளடக்கியிருக்கின்ற நிலையில் இவர்களுக்கும் சற்றும் சளைத்தவரல்லாதவராகவே இந்தியாவின் சிரேஷ்ட சுழற்பந்துவீச்சாளர் இரவிச்சந்திரன் அஷ்வின் காணப்படுகின்றார்.

இங்கிலாந்துக்கெதிரான இந்தியாவின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அஹமதாபாத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து மறுநாள் முடிவுக்கு வந்த மூன்றாவது டெஸ்டின் இங்கிலாந்தின் இரண்டாவது இனிங்ஸில் ஜொஃப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டைக் கைப்பற்றும்போது டெஸ்ட் போட்டிகளில் தனது 400ஆவது விக்கெட்டை அஷ்வின் கைப்பற்றியிருந்தார்.

அந்தவகையில், 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஷ்வின் 401 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இலங்கையணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு அடுத்ததாக 400 விக்கெட்டுகள் அடைவுமட்டத்தை அடைந்த வேகமான வீரராக அஷ்வின் காணப்படுகின்றார்.

தனது 25ஆவது வயதிலேயே டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட அஷ்வின் ஆரம்பத்திலிருந்து விக்கெட் வேட்டையை நடாத்திவருகின்றார். ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து மேம்பட்டு வரும் அஷ்வின், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆடுகளங்களில் தடுமாறியிருக்கிறார்.

இந்நிலையில், தனது அனுபவத்தால் தொடர்ந்து மேம்பட்டு வரும் அஷ்வின், கடந்த அவுஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின்போது அவுஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர் நேதன் லையனை விட சிறப்பாக பந்துவீசியிருந்தார்.

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னை சுப்பர் கிங்ஸுக்கான சிறப்பான பெறுபேறுகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலேயே முதலில் அறிமுகமாக அஷ்வின், பின்னர் டெஸ்ட்களில் தன்னை நிலைப்படுத்தியிருந்தார்.

மேற்குறிப்பிட்ட நாடுகளில் குறைவான பெறுபேறுகளால், ஆரம்பங்களில் சிறப்பாகவிருந்த துடுப்பாட்டமும் குறைவடைய இடையே இரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ்விடம் முதன்மைச் சுழற்பந்துவீச்சாளர் என்ற இடத்தை அஷ்வின் பறிகொடுத்திருந்தாலும், தனது கடந்த ஆறு போட்டிகளில் 36 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தான் எப்போதுமே ராஜா என்பதை நிரூபித்திருக்கிறார்.

டெஸ்ட்களில் 28.11 என்ற ஓட்ட சராசரியில் 2,643 ஓட்டங்களை அஷ்வின் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் கரம் போல், பின்னர் லெக் ஸ்பின் என எப்போதும் தன்னை மேம்படுத்துவதற்காக பயணிக்கும் அஷ்வின், 111 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், 46 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் கடந்த நான்கு ஆண்டுகளாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியிருக்கவில்லை.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் றிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றுகின்றார்கள், இரவீந்திர ஜடேஜாவின் சகலதுறை ஆகியவற்றால் தொடர்ந்தும் அஷ்வினின் மீள்வருகை இப்போட்டிகளில் கடினமாக இருக்கின்ற நிலையில், ஐ.பி.எல்லில் இனிங்ஸின் எப்பகுதியிலும் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தல், முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதில் அண்மைக்காலமாக அஷ்வின் சிறந்து காணப்படுகின்றார்.

ஆக, இந்தியாவில் இவ்வாண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், அஷ்வினின் குறித்த பெறுபேறுகள், இந்திய அணியில் இடத்தை வழங்குமா என்பதை அணி முகாமைத்துவமே முடிவு செய்ய வேண்டும்.

இந்த இடம் கிடைத்தாலும், கிடைக்காவிடிலும் நவீன உலக கிரிக்கெட் ஜாம்பவான்களில் அஷ்வினின் பெயருக்கு நிச்சயம் இடமுண்டு.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X