Shanmugan Murugavel / 2016 ஜூலை 26 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பித்த நிலையில், மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, முதல்நாள் முடிவில் பின்னடைவைச் சந்தித்துத் தடுமாறுகிறது.
கண்டி பல்லெகெல மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இலங்கை சார்பாக துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா, சுழற்பந்து வீச்சாளர் லக்ஷன் சந்தகன் ஆகியோர் தங்களது அறிமுகங்களை மேற்கொண்டனர்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 34.2 ஓவர்கள் மாத்திரமே தாக்குப்பிடித்து, 117 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 5ஆவது ஓவரில், இலங்கை அணி 6 ஓட்டங்களைப் பெற்றிருந்த போதே முதலாவது விக்கெட்டை இழந்த இலங்கை அணி, 9.1 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 4ஆவது விக்கெட்டுக்காக தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால் இருவரும் இணைப்பாட்டமொன்றைப் பகிர்ந்த போதிலும், 43 ஓட்டங்களில் 4ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. பின்னர், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட, இலங்கை அணியால் மீள முடியாது போனது.
துடுப்பாட்டத்தில் தனஞ்சய டி சில்வா 24, குசால் பெரேரா 20, லக்ஷன் சந்தகன் ஆட்டமிழக்காமல் 19, டினேஷ் சந்திமால் 15, அஞ்சலோ மத்தியூஸ் 15 ஓட்டங்களைப் பெற்றனர். வேறு எவரும் இரட்டைப்படை ஓட்டங்களைப் பெறவில்லை. பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸல்வூட், நேதன் லையன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், மிற்சல் ஸ்டார்க், ஸ்டீபன் ஓப் கீ இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 7 ஓட்டங்களுடன் தடுமாறிய போதிலும், பின்னர் சிறப்பான இணைப்பாட்டமாக, பிரிக்கப்படாத 59 ஓட்டங்களைப் பகிர்ந்தது. 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 66 ஓட்டங்களுடன் அவ்வணி காணப்படும் போது, மழை குறுக்கிட்டது. அதன் பின்னர், போட்டியைத் தொடர முடிந்திருக்கவில்லை.
துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், உஸ்மான் கவாஜா இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 28, 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நுவான் பிரதீப்பும் ரங்கன ஹேரத்தும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago