2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜுவென்டஸை வீழ்த்திய செல்சி

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 24 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸுடனான குழு எச் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்று இறுதி 16 அணிகளுக்கு இடையிலான விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

செல்சி சார்பாக, ட்ரெவொஹ் சலோபாஹ், றீஸ் ஜேம்ஸ், கலும் ஹட்ஸன்-ஒடோய், திமோ வேர்னர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவுக்குமிடையிலான குழு ஈ போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில், ஸ்பானிய கழகமான செவில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான வொல்வ்ஸ்பேர்க்குடனான குழு ஜி போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் செவில்லா வென்றது. செவில்லா சார்பாக, ஜோன் ஜோர்டான், றாஃபா மிர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, சுவிற்ஸர்லாந்துக் கழகமான யங் போய்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டாவுக்குமிடையிலான குழு எஃப் போட்டியானது 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. அத்லாண்டா சார்பாக, துவான் ஸப்பட்டா, ஜொஸே லூயிஸ் பலோமினோ, லூயிஸ் முரியெல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். யங் போய்ஸ் சார்பாக, தியோஸன் சைபட்செயு, வின்சென்ட் சியர்ரோ, சில்வன் ஹெஃப்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், ஸ்பானிய கழகமான வில்லாறியலின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற குழு எஃப் போட்டியில் அவ்வணியை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று விலகல முறையிலான சுற்றுக்குத் தகுதி பெற்றது. யுனைட்டெட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜடோன் சஞ்சோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .