2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறேன்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 17 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை என, தென்னாபிரிக்க அணியின் அணியின் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு, டெஸ்ட் அணித்தலையில் தொடர்ந்தும் பதவி வகிக்கவும் தயார் என்றவாறான கருத்தை, அவர் வெளியிட்டுள்ளார்.

இந்தத் தொடரின் முதலாவது போட்டியின் பின்னர், அதிக போட்டிகளில் விளையாடுவதாகவும், ஓய்வு தேவைப்படுவதாகவும், இந்தாண்டு மே மாதத்தில், எதிர்காலம் குறித்து, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாகவும், அவர் தெரிவித்திருந்தார். இதனால், சர்வதேசப் போட்டிகளிலிருந்தோ அல்லது டெஸ்ட் போட்டிகளிலிருந்தோ அவர் ஓய்வுபெறக் கூடும் என்றவாறான சந்தேகம் எழுந்திருந்தது.

எனினும், இங்கிலாந்து அணிக்கெதிராக 3ஆவது போட்டியில் பெறப்பட்ட தோல்வியைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகுவது பற்றி எப்போதும் சிந்தித்ததில்லை எனத் தெரிவித்தார். மாறாக, வருடத்தில் சிறிது ஓய்வைப் பெற்றுக் கொள்வது பற்றியே சிந்தித்ததாக, அவர் குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்க அணி மோசமாகத் தோல்வியடைந்து, முதலிடத்தை இழந்துள்ள போதிலும், அணி வீரர்களின் திறமையில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை எனத் தெரிவித்த அவர், தொடர்ச்சியாக ஓட்டங்களைக் குவிப்பதிலும், அழுத்தங்களுக்கு மத்தியில் விளையாடுவதிலுமேயே, கவனஞ்செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
அணியில் இளைய வீரர்கள் காணப்படுவதால், அவர்களை வழிநடத்த விரும்புவதாகவும், விளையாட்டிலிருந்து ஓய்வுபெறும் போது, இளைய வீரர்களில் தாக்கத்தைச் செலுத்திய திருப்தியுடன் வெளியேற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

'நான் அணித்தலைவராக இருக்க விரும்புகிறேன். அடுத்த போட்டியிலும் நான் அணித்தலைவராக இருப்பேன் என நம்புகிறேன். பார்ப்போம்" என அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .