Shanmugan Murugavel / 2016 ஜனவரி 11 , மு.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இடம்பெற்ற சிம்பாப்வேக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரைக் கைப்பற்றி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் பத்தாம் இடத்துக்கு வந்த ஆப்கானிஸ்தான், தற்போது மொஹம்மட் ஷஷாட்டின் அதிரடி கைகொடுக்க, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
ஏற்கெனவே, முதலாவது போட்டியை ஆப்கானிஸ்தான் வென்றிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (10), ஷார்ஜாவில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணித்தலைவர் எல்டன் சிக்கும்புரா, ஆப்கானிஸ்தானை துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அதன்படி, களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு, ஆரம்பத் துடுப்பாட்டவீரராக களமிறங்கிய மொஹம்மட் ஷஷாட்டின் அதிரடிச் சதம் கைகொடுக்க, அவ்வணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக மொஹம்மட் ஷஷாட், ஆட்டமிழக்காமல் 67 பந்துகளில் 8, ஆறு ஓட்டங்கள், 10, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 118 ஓட்டங்களைப் பெற்றார். அடுத்ததாக, மொஹம்மட் நபி, 12 பந்துகளில் 2, ஆறு ஓட்டங்கள், ஒரு நான்கு ஓட்டம் உள்ளடங்கலாக 22 ஓட்டங்களைப் பெற்றார்.
ஷஷாட் பெற்ற மேற்படி ஓட்ட எண்ணிக்கையானது, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் துணை அங்கத்துவ நாடு ஒன்றின் வீரர் பெற்ற அதிக ஓட்ட எண்ணிக்கை என்பதுடன், அனைத்து நாடுகளும் உள்ளடங்கலாக ஒரு வீரர் பெற்ற நான்காவது மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையாகும்.
பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக, டென்டாய் சிஸோரே, லுக் ஜொங்வி, டொனால்ட் ட்ரிபானோ, கிரேமி கிறீமர், சமு சிபாபா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அணியின் பந்துவீச்சாளர்கள் ஓரளவு சிறப்பாக செயற்பட்டிருந்தபோதும் பிடியெடுப்புக்களை தவறவிட்டதன் காரணமாகவே அதிக ஓட்டங்கள் குவிக்கப்பட்டிருந்தன.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 81 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அவ்வணி சார்பாக ஹமில்டன் மசகட்சா, 5, ஆறு ஓட்டங்கள், 2, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 63 ஓட்டங்களையும் பீற்றர் மூர், 32 பந்துகளில் 2, ஆறு ஓட்டங்கள், 2, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக டவால்ற் ஸட்ரான், அமிர் ஹம்ஸா, சயீத் ஷிர்ஸட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொஹம்மட் நபி, ரஷீட் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் மொஹம்மட் ஷஷாட் தெரிவானார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago