2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

நான் இப்போது வேறு மனிதன்: ஆமிர்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 04 , பி.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கான கிரிக்கெட் தொடருக்காக, ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியவற்றுக்கான பாகிஸ்தான் குழாமில் சேர்க்கப்பட்டுள்ள மொஹமட் ஆமிர், தான் தற்போது வேறு மனிதன் எனத் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு, லோர்ட்ஸில் இடம்பெற்ற இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில், ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டமைக்காகத் தண்டனை விதிக்கப்பட்ட சல்மான் பட், மொஹமட் ஆசிப், மொஹமட் ஆமிர் ஆகியோரில் மொஹமட் ஆமிர், தற்போது மீண்டும் பாகிஸ்தான் குழாமில் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும், அவரது இணைப்புக்கெதிராக எதிர்ப்புகளும் காணப்படுகின்றன. குறிப்பாக, ஒருநாள் சர்வதேசப் போட்டி அணித்தலைவரான அஸார் அலி, தனது பதவியிலிருந்து விலகுவதற்கு முயன்றிருந்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள மொஹமட் ஆமிர், 'நான் இப்போது வித்தியாசமான மனிதன். வாழ்க்கை பற்றிய எனது பார்வை மாறிவிட்டது. நான், நேர்முறையாக உள்ளேன். அந்தச் சிறிய வயதில், ஏராளமானவற்றை அனுபவித்து விட்டேன். எனது எதிர்காலத்தைப் பற்றித் தெரியாது. அடுத்தது என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. தொழில்முறை விளையாட்டுவீரனாக, நம்பிக்கையை மீள எடுப்பதற்கு, என்னால் முடிந்ததை நான் செய்வேன்" எனத் தெரிவித்தார்.

நம்பிக்கையை மீள வெல்வது மிகவும் மெதுவான நடைமுறை என்பதை ஏற்றுக் கொண்ட அவர், தனது பெறுபேறுகளின் உதவியோடு அதை வெற்றிகொள்வார் என நம்பிக்கை வெளியிட்டார். பிரச்சினைகளுக்கு மத்தியில், தன்னோடு தோள்நின்ற இரசிகர்களுக்காக, இதைச் செய்ய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மீதான விமர்சனங்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, 'நான் பிழை செய்திருக்கிறேன் என அவர்கள் சொன்னால், நல்லதொன்றுக்காக என்னை மாற்றுவதற்கும் அவர்கள் சந்தர்ப்பம் தர வேண்டும். அவர்களுடைய ஆதரவு எனக்கு வேண்டும். நான் மாற்றமடைந்த ஒருவன் என்பதை நான் நிரூபிப்பேன்" என்றார்.

மொஹமட் ஆமிரின் உள்ளடக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த அஸார் அலி, மொஹமட் ஆமிர் ஆகியோரின் எதிர்ப்பால், தான் காயமடையவில்லை எனத் தெரிவித்த அவர், அனைவருக்கும் கருத்தொன்று உள்ளதாகவும், அதைத் தான் மதிப்பதாகவும் தெரிவித்தார். எனினும், இவ்விடயத்தில் தலையிட்டு, தங்கள் அனைவரையும் ஒன்றிணைத்தமைக்காக, கிரிக்கெட் சபைக்குப் பாராட்டுத் தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .