2025 ஜூலை 05, சனிக்கிழமை

நடப்புச் சம்பியன்களை வென்று சம்பியனானது நியூசிலாந்து

Editorial   / 2019 ஜூலை 22 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் லிவர்பூலில் இடம்பெற்றுவந்த சர்வதேச வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் 15ஆவது வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து சம்பியனாகியுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன்களான அவுஸ்திரேலியாவை வென்றே ஐந்தாவது தடவையாக நியூசிலாந்து சம்பியனாகியிருந்தது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருந்த தத்தமது அரையிறுதிப் போட்டிகளில் முறையே 47-45 என்ற புள்ளிகள் கணக்கில் இங்கிலாந்தை நியூசிலாந்தும், 55-53 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாபிரிக்காவை அவுஸ்திரேலியாவும் வென்றே தொடர்ச்சியாக ஆறாவது தடவையாக இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தன.

இந்நிலையில், முதற்காற்பகுதியில் 61 சதவீதமான நேரத்தில் நியூசிலாந்தே பந்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும், தமது அணித்தலைவி கைட்லின் பஸெட் மூலம் புள்ளிகளைப் பெற்ற அவுஸ்திரேலியா 10-10 என்ற புள்ளிகள் கணக்கில் முதற்காற்பகுதியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

இரண்டாவது காற்பகுதியில் பஸெட்டோடு, நியூசிலாந்தின் மரியா புலா, அமெலியாரன்னே எகெனாசியோவும் புள்ளிகளைப் பெற இக்காற்பகுதியில் அவுஸ்திரேலியா பெற்ற 15 புள்ளிகளை விட மூன்று புள்ளிகள் அதிகமாகப் பெற்ற நியூசிலாந்து, முதற்பாதி முடிவில் 28-25 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றுக் காணப்பட்டது.

இந்நிலையில், மூன்றாவது காற்பகுதியில் நியூசிலாந்தின் அணித்தலைவி லோரா லங்மன், ஜினா கிராம்ப்டனால் பந்துகள் வழங்கப்பட புலா, எகெனாசியோ தொடர்ந்து புள்ளிகளைப் பெற, அவுஸ்திரேலியா 12 புள்ளிகளை இக்காற்பகுதியில் பெற 13 புள்ளிகளைப் பெற்ற நியூசிலாந்து 41-37 என்ற புள்ளிகள் கணக்கில் மூன்றாவது காற்பகுதியில் முன்னிலை வகித்தது.

இறுதிக் காற்பகுதியின் ஆரம்பத்தில் மூன்று புள்ளிகளை அடுத்தடுத்து பெற்று நியூசிலாந்தின் முன்னிலையை ஒரு புள்ளியாக அவுஸ்திரேலியா குறைத்தபோதும், புலா, எகெனாசியோ தொடர்ந்து புள்ளிகளைப் பெற நான்கு புள்ளி இடைவெளி வந்ததுடன், பின்னர் பஸட் மூன்று புள்ளிகளைப் பெற முன்னிலை ஒரு புள்ளியாகக் குறைந்தது.

ஐந்து நிமிடங்கள் இருக்கையில் 51-48 என்ற புள்ளிகள் கணக்கில் நியூசிலாந்து முன்னிலையிலிருந்த நியூசிலாந்தை துரத்திய வண்ணம் இறுதி 90 செக்கன்களில் அவுஸ்திரேலியா இருந்தபோதும் இறுதியில் 52-51 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.

இந்நிலையில், இத்தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில் 58-42 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாபிரிக்காவை வென்ற இங்கிலாந்து மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

16 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், 15/16ஆம் இடங்களுக்கான போட்டியில் சிங்கப்பூரை 78-57 என்ற புள்ளிகள் கணக்கில் வென்ற இலங்கை 15ஆம் இடத்தைப் பெற்றிருந்தது.

இத்தொடரின் நாயகியாக தென்னாபிரிக்காவின் கார்லா பிறிட்டோறியஸ் தெரிவாகியிருந்த நிலையில், இலங்கையின் கோல் எய்யும் வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கமே அதிகூடியதாக 348 மொத்தப் புள்ளிகளைப் பெற்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .