2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

நமீபியாவுக்கெதிராக ஆப்கானிஸ்தானுக்கு இனிங்ஸ் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவிலுள்ள கிரேட்டர் நொய்டா விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் ஆப்கானிஸ்தான், நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 36 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

நான்கு நாட்களைக் கொண்ட இப்போட்டியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) ஆரம்பித்திருந்தது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக பிக்கி யா பிரான்ஸ் 46 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக மொஹம்மட் நபி ஐந்து விக்கெட்டுகளையும் ஸஹிர் கான் மூன்று விக்கெட்டுகளையும் டவால்ட் ஸட்ரான், ரஹ்மட் ஷா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக மொஹம்மட் ஷஷாட் 139 ஓட்டங்களையும் அஃப்ஸர் ஸஸாய் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களையும் அஸ்கர் ஸ்டனிஸ்காய் 37 ஓட்டங்களையும் நூர் அலி ஸட்ரான் 29 ஓட்டங்களையும் டவால்ட் ஸட்ரான் 27 ஓட்டங்களையும் மொஹம்மட் நபி 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நமீபீயா அணி சார்பாக ஜெர்ரி ஸைன்மன் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு தமது இரண்டாவது இனிங்ஸில் ஆடிய நமீபிய அணி, 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து ஒரு இனிங்ஸ் மற்றும் 36 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக பிக்கி யா பிரான்ஸ் 40 ஓட்டங்களையும் ஜெர்ஹார்ட் இரஸ்மஸ் 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ஸஹிர் கான் ஐந்து விக்கெட்டுகளையும் டவால்ட் ஸட்ரான் மூன்று விக்கெட்டுகளையும் மொஹம்மட் நபி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக மொஹம்மட் ஷஷாட் தெரிவானதோடு, ஆப்கானிஸ்தான் அணிக்கு 20 புள்ளிகள் கிடைக்கப்பெற்றிருந்தது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .