2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்துக் குழாம் அறிவிப்பு

Editorial   / 2018 மார்ச் 14 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், சகலதுறை வீரர் மிற்சல் சான்ட்னெர் இடம்பெறவில்லை. இப்பருவகாலத்தில் இவர் கொண்டிருந்த வலது முழங்கால் பிரச்சினை மோசமடைந்து சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையேற்பட்டுள்ள நிலையில் ஒன்பது மாதங்கள் வரையில் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், இத்தொடர் மட்டுமல்லாது, இந்தியன் பிறீமியர் லீக்கில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் மிற்சல் சான்ட்னெர் வாங்கப்பட்டிருந்த நிலையில், இப்பருவகால இந்தியன் பிறீமியர் லீக்கை தவறவிடவுள்ளதுடன், இங்கிலாந்து கவுண்டி அணியான டெர்பஷையர் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் அவ்வணியின் போட்டிகளையும் தவறவிடுகின்றார்.

இந்நிலையில், மிற்சல் சான்ட்னெர் இல்லாத நிலையில், 12 பேர் கொண்ட குழாமில் ஒரெயொரு சுழற்பந்துவீச்சாளராக டொட் அஸ்டில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இஷ் சோதி சிறப்பாகச் செயற்பட்டிருந்தபோதும் மிற்செல் சான்ட்னெரின் ஏறத்தாழ நேரடிப் பிரதியீடாகவே இஷ் சோதியை விட சிறப்பாகத் துடுப்பெடுத்தாடக் கூடிய டொட் அஸ்டில் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, கடந்தாண்டு டிசெம்பரில் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரை இடுப்புக் காயமொன்று காரணமாக தவறவிட்டிருந்த விக்கெட் காப்பாளர் பி.ஜெ வட்லிங் காயத்திலிருந்து குணமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இது தவிர, இங்கிலாந்துக்கெதிரான இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் தொடை காயம் காரணமாக பங்கேற்காத றொஸ் டெய்லரும் இத்தொடர் ஆரம்பிக்க முன்னர் உடற்றகுதியை அடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, ஒக்லன்டில் இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கும் முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கின்றது.

குழாம்: ஜீட் றாவல், டொம் லேதம், கேன் வில்லியம்சன், றொஸ் டெய்லர், ஹென்றி நிக்கொல்ஸ், கொலின் டி கிரான்ட்ஹொம், பி.ஜெ வட்லிங், டொட் அஸ்டில், டிம் செளதி, நீல் வக்னர், மற் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .