2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பீபா தங்கப்பந்து விருதை வென்றார் மெஸ்ஸி

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 12 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தங்கப்பந்து (பாலோன் டி ஓர் விருது) விருதை, பார்சிலோனா கழகத்தின் வீரரான ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த லியனொல் மெஸ்ஸி வெற்றிகொண்டார். இது, இவ்விருதை அவர் வெற்றிகொள்ளும் ஐந்தாவது தடவையாகும்.

தங்கப்பந்து விருதுக்கான வாக்கெடுப்பில், 41.33 சதவீத வாக்குகளைப் பெற்ற லியனொல் மெஸ்ஸி, இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டார். அவரது போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 27.76 சதவீத வாக்குகளைப் பெற, மெஸ்ஸியின் பார்சிலோனா கழக சக வீரரான பிரேஸிலின் நேமர், 7.86 சதவீத வாக்குகளை வெற்றிகொண்டார்.

இதில், தங்கள் நாடுகளின் தேசிய அணிகளின் தலைவர்கள் என்பதன் அடிப்படையில், மெஸ்ஸி, ரொனால்டோ இருவருக்கும் வாக்களிப்பும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. இருவருமே, தங்களது வாக்குகளை, மற்றையவருக்கு வழங்கியிருக்கவில்லை. தனது வாக்குகளை மெஸ்ஸி , லூயிஸ் சுவரேஸ் (முதல் வாக்கு), நேமர் (2ஆம் வாக்கு), இனியஸ்டோ அன்ட்ரியஸ் (3ஆம் வாக்கு) ஆகியோருக்கு வழங்க, ரொனால்டோ தனது வாக்குகளை, கரிம் பென்ஸீமா, ஜேம்ஸ் றொட்ரிகஸ், கரெத் பேல் ஆகியோருக்கு அளித்திருந்தார்.

இலங்கையின் தலைவர் நாலக றொஷான், பயிற்றுநர் சம்பத் பெரேரா இருவரும் தங்களது வாக்குகளை, அன்ட்ரியஸ் இனியஸ்டோ, லியனொல் மெஸ்ஸி, நேமர் ஆகியோருக்கு அளித்தனர்.

2015ஆம் ஆண்டில், தனது கழகத்துக்காகவும் நாட்டுக்காகவும் 61 போட்டிகளில் விளையாடிய லியனல் மெஸ்ஸி, 52 கோல்களையும் கோல்களுக்கான 26 உதவிகளையும் புரிந்திருந்தார். அவரது போட்டியாளரான ரொனால்டோ, 2015ஆம் ஆண்டில் 57 கோல்களைப் பெற்றிருந்த போதிலும், மெஸ்ஸியின் பார்சிலோன அணி, சம்பியன்ஸ் லீக், லா லிகா உட்பட 5 பட்டங்களை வெல்வதற்கு, மெஸ்ஸி உதவியமை, அவருக்கான அதிக ஆதரவை வழங்கக் காரணமாக அமைந்ததெனக் கருதப்படுகிறது.

இந்த விருதை மெஸ்ஸி கைப்பற்றும் ஐந்தாவது தடவை இதுவாகும். 2010ஆம் ஆண்டு, பீபாவின் சிறந்த வீரருக்கான விருது தங்கப்பந்து விருதாக மாற்றப்பட்ட பின்னர், தொடர்ச்சியாக 3 தடவைகள் வெற்றிபெற்றிருந்த மெஸ்ஸி, 2013ஆம், 2014ஆம் ஆண்டுகளில், ரொனால்டோவிடம் தோல்வியடைந்திருந்தார். எனினும், இம்முறை மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். தவிர, சிறந்த வீரர் விருதை 2009ஆம் ஆண்டிலும் அவர் வெற்றிகொண்ட நிலையில், அவரது ஐந்தாவது விருதாக இது அமைந்துள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, மார்க்கோ வான் பஸ்டென், மைக்கல் பிளட்டினி, ஜொஹான் குருய்ப் ஆகியோர், தலா 3 தடவை, இவ்விருதுகளை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .