2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

பிரதம தேர்வாளராக சனத்: அரவிந்தவுக்கு முக்கிய பதவி

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளராக, இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரிய, எதிர்வரும் மே முதலாம் திகதி முதல் நியமிக்கப்படவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால உறுதிப்படுத்தியுள்ளார்.

உலக இருபதுக்கு-20 தொடருக்கு முன்னதாக நியமிக்கப்பட்ட அரவிந்த டி சில்வா தலைமையிலான தேர்வாளர் குழாமின் பதவி, ஏப்ரல் மாத இறுதியுடன் முடிவடையவுள்ள நிலையிலேயே, பிரதம தேர்வாளராக சனத் ஜெயசூரிய உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

சனத் ஜெயசூரியவின் நியமனம் தொடர்பாக, இலங்கை கிரிக்கெட் சபையில் ஏற்கெனவே ஓரளவு உறுதியான முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், விளையாட்டுத்துறை அமைச்சரால் அந்தப் பதவி உறுதிப்படுத்த வேண்டுமென்பதால், அது தொடர்பான அறிவிப்பு வெளியிடுவது தாமதாகியிருந்தது. இந்நிலையிலேயே, கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, இது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

பிரதம தேர்வாளராக சனத் ஜெயசூரிய அறிவிக்கப்பட்டாலும், தேர்வுக்குழுவில் இடம்பெறவுள்ள ஏனைய உறுப்பினர்களின் விவரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், முன்னாள் விக்கெட் காப்பாளரான றொமேஷ் களுவிதாரண, முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரஞ்சித் மதுரசிங்க ஆகியோர், இந்தக் குழாமில் இடம்பெறுவரென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் குழாமின் பதவிக்காலம் தொடர்பாகவும் இதுவரை உறுதிப்படுத்தப்படாத போதிலும், 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணம் வரை, இக்குழுவின் நடவடிக்கைகள் இடம்பெறும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர், 2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 2015வரை, இலங்கையின் பிரதம தேர்வாளராக சனத் ஜெயசூரிய பதவி வகித்ததோடு, அக்காலத்தில் உலக இருபதுக்கு-20 தொடரின் சம்பியன்களாக இலங்கை அணி தெரிவானதோடு, இங்கிலாந்தில் வைத்து டெஸ்ட் தொடரொன்றையும் வெற்றிகொண்டிருந்தது. ஆனால், சிரேஷ்ட வீரர்களான மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார ஆகியோருடன் சிறந்த உறவைப் பேணியிருக்காத சனத் ஜெயசூரிய, அவர்களோடு பகிரங்கமாக வாய்த்தர்க்கங்களிலும் ஈடுபட்டிருந்தார். இது, அவரது காலத்தில் காணப்பட்ட முக்கியமான குறைபாடாகக் கருதப்பட்டது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றுவதை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை கிரிக்கெட் சபையில் கிரிக்கெட் விவகாரங்களுக்கான தலைவராக, இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, நேற்றுத் தெரிவித்தார். இவருடைய பதவிக்காலம் தொடர்பான தகவல்களும், இதுவரை வெளியிடப்பட்டிருக்கவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .