2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், 177 ஓட்டங்களால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, அத்தொரையும் கைப்பற்றியுள்ளது.

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவுஸ்திரேலிய அணி, மேலதிகமாகத் துடுப்பெடுத்தாடாது, 460 ஓட்டங்களை மேற்கிந்தியத் தீவுகளுக்கு இலக்காக வழங்கியது.

இத்தொடரின் ஏனைய இனிங்ஸ்களைப் போலல்லாது, ஓரளவு சிறப்பான ஆரம்பத்தைப் பெற்ற அவ்வணி, ஒரு விக்கெட்டை இழந்து 83 ஓட்டங்களுடன் காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர் விக்கெட்டுகள் இழக்கப்பட்டு, 5 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களுடன் காணப்பட்டது. 6ஆவது விக்கெட்டுக்காக 100 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், இறுதியில் 282 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, 177 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஜேஸன் ஹோல்டர் 68, டினேஷ் ராம்டின் 59, ராஜேந்திர சந்திரிகா 37, கிறெய்க் பிறெய்த்வெய்ட் 31 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், மிற்சல் மார்ஷ் 4, நேதன் லையன் 3, ஜேம்ஸ் பற்றின்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, ஜோ பேர்ண்ஸ், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், அடம் வோஜஸ் ஆகியோரின் சதங்களின் உதவியோடு 551 ஓட்டங்களைப் பெற்றதோடு, மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெரன் பிராவோவின் 81 ஓட்டங்களின் துணையோடு, 271 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.

இப்போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அவுஸ்திரேலியாவின் வெற்றிக்குப் பங்களிப்பை வழங்கிய நேதன் லையன், இப்போட்டியின் நாயகனாகத் தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .