2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

யூரோ 2016: காலிறுதியில் போர்த்துக்கல், வேல்ஸ், போலந்து

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 26 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றின் முதலாவது நாள் முடிவில், போர்த்துக்கல், வேல்ஸ், போலந்து ஆகிய அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

போர்த்துக்கல், குரோஷியா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், மேலதிக நேரத்துக்கு போட்டி சென்ற நிலையில், குரோஷியாவின் இவான் பெரிசிக் தலையால் முட்டிய பந்தொன்று, கோல்கம்பத்தில் பட்டு திரும்பிய பின்னரான நிமிடத்தில் அதிரடியான நகர்வொன்றை 117ஆவது நிமிடத்தில் மேற்கொண்ட போர்த்துக்கல்லுக்கு, மாற்று வீரரான றேனாட்டோ பந்தை முன்னோக்கி கொண்டு சென்று நானியிடம் கொடுக்க, அதை நானி கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் கொடுக்க, ரொனால்டோ அதை கீழ்ப்புறமாக உதைக்க, குரோஷியா கோல்காப்பாளர் சுபசிக்கினால் தடுக்கப்பட்ட அந்த உதை, றிக்கார்டோ குவாரேஸ்மாவிடம் செல்ல, அவர் அதனை கோலாக்க, போர்த்துக்கல் 1-0 என்ற கோல்கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.

எவ்வாறெனினும் மேற்படி போட்டியில், லா லிகாவின் நட்சத்திரங்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மொட்ரிக், இவான் ராகிட்டிக் ஆகியோர் விளையாடியிருந்தபோதும் ஏனைய வீரர்களால் அவர்கள் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களால் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருக்க முடிந்திருக்கவில்லை.

வேல்ஸ், வட அயர்லாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற மற்றைய, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியொன்றிலும் இரண்டு அணிகளும் கோல் பெறுவதற்கான வாய்ப்புகளை கொண்டிருக்காதபோதும், போட்டியின் 76ஆவது நிமிடத்தில், வேல்ஸின் நட்சத்திரவீரர் கரித் பேல் உதைத்த பந்தொன்று, வடக்கு அயர்லாந்தின் பின்கள வீரரான கரித் மக்கோலியின் காலில் பட்டு ‘ஒவ்ண் கோல்’ ஆக மாற, இக்கோலின் மூலம் 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற வேல்ஸ் காலிறுதிக்குள் நுழைந்தது. இப்போட்டியில் வேண்டுமென்றே வேல்ஸ் வீரர்கள் நேரம் கடத்தினர் என்று வட அயர்லாந்தின் பயிற்சியாளர் மைக்கல் ஓ நீல் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதேவேளை, போலந்து, சுவிற்றஸர்லாந்து ஆகிய அணிகளுக்கிடையிலான மற்றைய இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்று சமநிலையில் இருந்த நிலையில், போட்டி மேலதிக நேரத்துக்கு சென்றிருந்ததோடு, அதில் இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், காலிறுதிக்கு செல்லும் அணியை தீர்மானிப்பதுக்கு வழங்கப்பட்ட பெனால்டியில் 5-4 என்ற ரீதியில் வெற்றி பெற்ற போலந்து காலிறுதிக்குள் நுழைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .