Shanmugan Murugavel / 2016 ஜூன் 21 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் இடம்பெற்று வரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு, குழு பியிலிருந்து வேல்ஸும் இங்கிலாந்தும் தகுதி பெற்றுள்ளன.
திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ரஷ்யாவுடனான போட்டியில் வேல்ஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தும் ஸ்லோவாக்கியாவுடனான போட்டியை இங்கிலாந்து சமநிலையில் முடித்துக் கொண்டதை தொடர்ந்துமே, வேல்ஸும் இங்கிலாந்தும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
வேல்ஸ், ரஷ்யா அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 3-0 என்ற கோல்கணக்கில் ரஷ்யாவைத் தோற்கடித்த வேல்ஸ், குழு பியிலிருந்து முதலாவது அணியாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. வேல்ஸ் சார்பாக, ஆரோன் ராம்ஸே, நீல் டெய்லர், கரித் பேல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தனர்.
1958ஆம் ஆண்டு உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிகளின்போது, பீலே பெற்ற கோலினால், பிரேஸிலிடம் தோல்வியடைந்து வெளியேறிய பின்னர், சர்வதேசத் தொடர் ஒன்றின் நொக்-அவுட் சுற்றுக்கு வேல்ஸ் நுழையும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்நிலையில், முதற்தடவையாக யூரோ கிண்ணப் போட்டிகளில் பங்கேற்ற வேல்ஸ், தனது, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியின்போது, குழு ஏயில் மூன்றாமிடம் பெற்றுள்ள (அல்பேனியா) அல்லது குழு டியில் மூன்றாமிடத்தைப் பெறும் (செக் குடியரசு அல்லது குரோஷியா அல்லது துருக்கி) அல்லது குழு சியில் மூன்றமிடத்தைப் பெறும் (ஜெர்மனி அல்லது போலந்து அல்லது வடக்கு அயர்லாந்தைச் ) எதிர்வரும் சனிக்கிழமை (25) சந்திக்கவுள்ளது.
மறுகணம், இங்கிலாந்து, ஸ்லோவாக்கியா அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்து அணியில் அணித்தலைவர் வெய்ன் ரூனி உள்ளிட்ட ஆறு பேர் மாற்றப்பட்டிருந்த நிலையில், இரண்டு அணிகளும் இப்போட்டியில் கோல்களை பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
இந்நிலையில், குழு பியில் இரண்டாமிடம் பெற்றுள்ள இங்கிலாந்து, குழு எஃப்இல் இரண்டாமிடம் பெறும் அணியை, தனது இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் சந்திக்கவுள்ளது. குழு எஃப்இல் இரண்டாமிடம் பெறும் அணியாக, பெரும்பாலும் போர்த்துக்கல்லே இருக்கும் என்ற நிலையில், 2004ஆம் ஆண்டு யூரோ கிண்ணத்தின் போதும் 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் போதும் போர்த்துக்கல்லே இங்கிலாந்தை வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் ஒஸ்திரியா, ஹங்கேரி, ஐஸ்லாந்து ஆகிய அணிகளும் குழு எஃப்இல் இரண்டாமிடத்தைப் பிடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குழு நிலைப் போட்டிகளுடன் ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் லெயோனிட் ஸ்லூட்ஸ்கி பதவி விலக முன்வந்துள்ளார். இவரினது ஒப்பந்த காலம், யூரோ 2016 உடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குரோஷியா, செக் குடியரசு அணிகளுக்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற போட்டியில், இரசிகர்கள் குழப்பம் விளைவித்தமைக்காக, ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் கூட்டமைப்பு, குரோஷியாவுக்கு 100,000 யூரோ அபராதம் விதித்துள்ளது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago