2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ரஷ்யாவில் ஊக்கமருந்துச் சோதனைக்கான 736 முயற்சிகள் தோல்வி

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 16 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய தடகள வீரர்களில் ஊக்க மருந்துச் சோதனையை நடத்துவதற்கு இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்ட பல நூற்றுக்கணக்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள உலக ஊக்கமருந்துக்கெதிரான முகவராண்மை, அதுகுறித்த அதிர்ச்சிகரமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அரச ஆதரவளிக்கப்பட்ட ஊக்கமருந்துப் பாவனை இடம்பெறுவதாகவும் ஊக்கமருந்துச் சோதனைகளில் முறைகேடு இடம்பெற்றதாகவும் தெரிவித்து, ரஷ்யாவின் தடகளச் சம்மேளனத்துக்கு, இடைக்காலத் தடை, கடந்தாண்டு விதிக்கப்பட்டது.

எனினும், இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், ரஷ்ய வீர, வீராங்கனைப் பங்குபற்ற அனுமதிப்பதாக, இல்லையா என்பது தொடர்பாக முடிவெடுக்கும் தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசச் சங்கத்தின் முக்கிய கூட்டம், வியன்னாவில் நாளை மறுதினம் சனிக்கிழமை (18) இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னதாகவே, இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கையின்படி, இவ்வாண்டு பெப்ரவரி 15ஆம் திகதிக்கும் மே 29ஆம் திகதிக்குமிடையில், ரஷ்ய தடகள வீர, வீராங்கனைகளிடம் ஊக்கமருந்துச் சோதனை மேற்கொள்ளப்பட்ட 736க்கும் மேற்பட்ட முயற்சிகள், தோல்வியடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

ஊக்கமருந்துச் சோதனையை மேற்கொள்வதற்கு, வீரர்களின் முகவரிகளாக, இராணுவ நகரங்கள் அல்லது தளங்களே, அவ்வீரர்களால் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான இடங்களுக்குச் செல்லும் மாதிரி சேகரிப்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. தவிர, மாதிரிகளைச் சேகரிப்போரின் ஆவணங்களையும் அவர்களின் அலுவலக அட்டைகளையும் புகைப்படம் எடுக்க வேண்டுமென, ரஷ்ய பயிற்றுநர்களும் வைத்தியர்களும் அந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இடங்களிலிருந்த ஊழியர்களும் வற்புறுத்தியுள்ளனர்.

வீரர்கள் செல்லும் இடங்கள், இராணுவத்தோடு நெருக்கமான இடங்களாக இருந்த நிலையில், அவ்விடங்களைச் சென்றடைவதற்கு, மாதிரி சேகரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது கடினம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தவிர, ஊக்கமருந்துப் பாவனை தொடர்பாகச் சிக்குவதிலிருந்து தப்புவதற்காக, அந்நாட்டு வீரர்கள் பயன்படுத்திய நகைச்சுவைத்தனமான விடயங்களும், அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீராங்கனையொருவர், அவரது உடலுக்குள் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனொன்றிலிருந்து மாதிரிகளை வழங்க முயன்றுள்ளார். அவ்வாறு மாதிரியை வழங்க முயன்றபோது, அந்தக் கொள்கலன் கீழே விழுந்துள்ளது. இதனையடுத்து, மாதிரி சேகரிப்பாளருக்கு இலஞ்சம் வழங்குவதற்கு அவர் முயன்றுள்ளார்.

மற்றொரு வீரர், போட்டிக்கு முன்பதாக வீரர்கள் ஒன்றுகூடும் இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். ஊக்கமருந்துச் சோதனையில் சிக்காமலிருப்பதற்காகவே அவர் இவ்வாறு தப்பியோடியுள்ளார். மற்றையவர், ஓட்டப் போட்டியொன்றின் நடுவே, மைதானத்தை விட்டுத் தப்பியோடியதோடு, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

சைக்கிளோட்ட வீரர்கள் இருவர், அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை ஓராண்டுக்கும் மேலாகத் தெரிவிக்காததோடு, சோதனைகளையும் தவறவிட்டிருந்தனர். அதுகுறித்துச் சுட்டிக்காட்டப்பட்டபோது, அவர்களிருவரும் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றனர்.

மற்றொரு சம்பவத்தில், ஐஸ் ஹொக்கி உலக சம்பியன்ஷிப் தொடரில், ரஷ்யாவின் 18 வயதுக்குட்பட்டோர் அணி, முழுமையாகவே மாற்றப்பட்டு, 17 வயதுக்குட்பட்டோர் அணி களமிறக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட மருந்தான மெல்டோனியத்தைப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்படும் என்ற அச்சத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவாவும், மெல்டோனியத்தைப் பயன்படுத்தியதன் காரணமாகவே, 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அவர், அமெரிக்காவிலேயே அதிகமாக வாழுகின்ற போதிலும், அவரைச் சிக்க வைத்த 2 சோதனைகளில் ஒரு சோதனை, ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் வைத்தே மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .