2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

றியல் மட்ரிட் கோல் மழை

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 06 , மு.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரின் கடந்த சனிக்கிழமை (05) இடம்பெற்ற போட்டியொன்றில் கோல்மழை புரிந்த றியல் மட்ரிட் அபார வெற்றி பெற்றது.

றியல் மட்ரிட், செல்ற்றா டீ விகோ ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 7-1 என்ற கோல்கணக்கில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றது. றியல் மட்ரிட் சார்பாக முதற்பாதியில் பெறப்பட்ட ஒரே ஒரு கோலை 40ஆவது நிமிடத்தில் பெப்பே பெற்றிருந்தார்.

இரண்டாவது பாதியின் 50ஆவது, 58ஆவது, 64ஆவது, 76ஆவது நிமிடங்களில் அவ்வணியின் நட்சத்திரவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடுத்தடுத்து நான்கு கோல்களை பெற்றார். பின்னர், போட்டியின் 77ஆவது நிமிடத்தில் ஜெசியும் 81ஆவது நிமிடத்தில் கரித் பேலும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தனர்.

இப்போட்டியில் பெற்ற கோல்களுடன் றியல் மட்ரிட்டுக்காக 350 கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றதுடன் லா லிகா வரலாற்றில் இரண்டாவதாக 252 கோல்களைப் பெற்றுள்ளார். தவிர, லா லிகாவின் இப்பருவகாலத்தில் 27 கோல்களைப் பெற்றுள்ளார்.

இப்போட்டியில் பெற்ற வெற்றி மூலம் 60 புள்ளிகளைப் பெற்றுள்ள றியல் மட்ரிட், லா லிகா புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்திலுள்ள அத்லெட்டிகோ மட்ரிட்டை விட ஒரு புள்ளியே குறைவாகப் பெற்றுள்ளது. முதலாமிடத்தில், பார்சிலோனா 69 புள்ளிகளுடன் இருக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .