Shanmugan Murugavel / 2016 ஜூலை 02 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் சுற்றுத் தொடரில், ஆண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில் உலகில் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச், 3ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.
நடப்புச் சம்பியனான ஜோக்கோவிச், 28ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் சாம் குரேயை எதிர்கொண்டார். முதலாவது செட்டை 6-7 என்ற புள்ளிகள் கணக்கிலும் இரண்டாவது செட்டை 1-6 என்ற கணக்கிலும் இழந்த ஜோக்கோவிச், மூன்றாவது செட்டை 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி நம்பிக்கையளித்தாலும், அடுத்த செட்டை 6-7 என இழந்து, தோல்வியடைந்து வெளியேறினார்.
அண்மைக்காலமாக, அசைக்க முடியாத வீரராகத் திகழ்ந்துவரும் ஜோக்கோவிச், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறாமல் விட்டிருந்தாலேயே அது மிகப்பெரிய அதிர்ச்சியாகக் கருதப்படும் என்ற நிலையில், அவரது 3ஆவது சுற்றுத் தோல்வி அமைந்துள்ளது.
ஏனைய போட்டிகளில், உலகின் 2ஆம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரே, அவுஸ்திரேலியாவின் ஜோன் மில்மாமனை எதிர்கொண்டு, 6-3, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று, 4ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
5ஆம் நிலை வீரரான ஜப்பானின் கேய் நிஷிகோரி, ரஷ்யாவின் அன்ட்ரே குஸ்னெட்சொவ்வை, 7-5, 6-3, 7-5 என்ற செட் கணக்கிலும் 6ஆம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் றாவோனிக், 27ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜக் சொக்கை, 7-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கிலும் வெற்றிகொண்டனர்.
பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில் 3ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னிஸ்கா ரட்வன்ஸ்கா, செக் குடியரசின் கத்தெரினா சினியாகோவாவை, 6-3, 6-1 என்ற செட் கணக்கிலும், 4ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், சகநாட்டு வீராங்கனையான கரினா வித்தோப்ட்டை, 7-6, 6-1 என்ற செட் கணக்கிலும், 5ஆம் நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், நெதர்லாந்தின் கிகி பேர்ட்டென்ஸை 6-4, 6-3 என்ற செட் கணக்கிலும் தோற்கடித்தனர்.
10ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா, ரஷ்யாவைச் சேர்ந்த எகடெரினா மகரோவாவிடம், 5-7, 6-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago