2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

விம்பிள்டன்: கேர்பர், நடால் அதிர்ச்சித் தோல்வி

Editorial   / 2017 ஜூலை 12 , மு.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின் 4ஆவது சுற்றில், பெண்களின் முதல்நிலை வீராங்கனையான அங்கெலிக் கேர்பர், ஆண்களில் 4ஆம் நிலை வீரரான ரபேல் நடால், பெண்களில் 5ஆம் நிலை வீராங்கனையான கரோலின் வொஸ்னியாக்கி ஆகியோர், அதிர்ச்சித் தோல்விகளைச் சந்தித்தனர். 

ஜேர்மனியின் கேர்பர், 14ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெய்னின் கார்பைன் முகுருஸாவை எதிர்கொண்டார். முதலாவது செட்டை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய அவர், அடுத்த 2 செட்களையும் தலா 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்து, தோல்வியடைந்தார். 

டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி, 24ஆம் நிலையிலுள்ள ஐ.அமெரிக்காவைச் சேர்ந்த கொகோ வன்டெவெகேயை எதிர்கொண்டு, 6-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 

ஆண்களில் ஸ்பெய்னின் நடால், லக்ஸம்பேர்க்கின் கிலெஸ் மல்லரை எதிர்கொண்டார். முதலிரு செட்களையும் 3-6, 4-6 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்த நடால், அடுத்த 2 செட்களையும் 6-3, 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். தீர்மானமிக்க செட்டாக மாறிய 5ஆவது செட்டில், 2 வீரர்களும் விட்டுக் கொடுக்காமல் விளையாடிய போதிலும், இறுதியில் 15-13 என்ற புள்ளிகள் கணக்கில் மல்லர் வெற்றிபெற்று, காலிறுதிக்குத் தகுதிபெற்றார். 

தவிர, ஆண்களில் 8ஆம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தியெம், 10ஆம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸ்வெரெவ் ஆகியோரும் தோல்விடைந்தனர். 

பெண்களில் 9ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னியஸ்கா ரட்வன்ஸ்கா, பெலாரஸின் விக்டோரியா அஸரெங்கா ஆகியோரும் தோல்வியடைந்தனர். 

ஆண்களில், முதல் நிலை வீரரான பெரிய பிரித்தானியாவின் அன்டி மரே, 3ஆம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 5ஆம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் றாவோனிஸ் ஆகியோர் வெற்றிபெற்று, காலிறுதிக்குத் தகுதிபெற்றனர். 

பெண்களில், 2ஆம் நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், 6ஆம் நிலை வீராங்கனையான பெரிய பிரித்தானியாவின் ஜொஹன்னா கொன்டா, 7ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்னெட்ஸோவா, 10ஆம் நிலை வீராங்கனையான ஐ.அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோரும் வெற்றிபெற்றனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .