2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'குளங்கள் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தால் 15 ஏக்கர் நெற்செய்கை பாதிப்படையும்'

Kogilavani   / 2014 மே 13 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'மட்டக்களப்பு கித்துள் மற்றும் உறுகாமம் குளங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் 15ஆயிரம் ஏக்கர் மேலதிக நெற்செய்கை பாதிப்படையும்' என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் திங்கட்கிழமை(12)  தெரிவித்தார்.

செங்கலடியில் நடைபெற்ற விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதியமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

'கிரான்புல் வடிச்சலை கட்ட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திற்காக கித்துள் உறுகாமம் குளங்கள் இணைப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தடுக்க முற்படுகிறார்கள். உறுகாமம் மற்றும் கித்துள் குளங்கள் இணைப்பதன் மூலம்  கிரான்புல் வடிச்சல் முதல் கிரான் பிரதேசம் வரை விவசாயத்துக்கு நீர் வழங்க முடியும்.

இந்த பாரிய நீர்பாசன திட்டத்தின் மூலம் அதிக நீர் சேமித்துவைக்கப்படும். இதனால் சித்தாண்டிப் பிரதேசத்தில் வெள்ளப் பாதிப்பினைத் தடுக்க முடியும். தற்போது 12 எம்சிஎம் ஆக உள்ள நீரின் அளவு இரு குளங்களின் இணைப்பின் மூலம் 60 எம்சிஎம் ஆக அதிகரிக்கும். இந்த நீரினை பெரியவட்டுவான் இலுக்கு பிரதேசங்களிலுள்ள வயல்களுக்கும் வழங்க முடியும்.

இந்த நீர்பாசன திட்டத்தின் மூலம் கல்குடா தொகுதியில் வாகரை பிரதேசம் வரை குடிநீர் வழங்க முடியும். இவ்வாறு மக்களுக்கு பயன்தரும் திட்டங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிப்புத் தெரிவிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வாகனேரி பிரதேச விவசாயிகள் நீர்பாசன வசதி ஏற்படுத்தி தருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டதனால் நீர்ப்பாசன நீர்முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுடன் தொடர்புகொண்டு மாதுறுஓயா குளத்திலிருந்து இரண்டு அடி நீர் திறக்கப்பட்டு பொண்டுகள்சேனை ஆற்றினுடாக நீர் வழங்கப்பட்டது.

விவசாயிகள் நீர்பாசன திணைக்களம் ஊடாகவும் கமநல சேவை திணைக்களம் ஊடாகவும் தங்களது அமைப்புகளை சரியான முறையில் கட்டியெழுப்ப வேண்டும். அதனுடாகவே உங்களது கோரிக்கைகளை முன்வைக்க முடியும். தொடர்ந்தும் ஒருசிலரை மாத்திரம் அமைப்புக்களின் தலைவர்களாக வைத்திருப்பதனால் பல பிச்சினைகள் ஏற்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை நரிப்புல்தோட்டம், கிரான், மண்டூர் மற்றும் காஞ்சிரங்குடாதுறை ஆகிய பகுதிகளில் பாலங்கள் அமைப்பதன் மூலம் தரைவழிப் போக்குவரத்து பூரணத்துவமடையும். இவ்வருட இறுதியில் கிரான் பாலத்திற்கான அடிக்கல் நடப்படவுள்ளது' என்றார்.

இச்சந்திப்பின் போது உறுகாமம் நீர்பாசன திட்டத்திலுள்ள பாலகன்வெளி, பூமாசேலை மற்றும் பாலவட்டுவான் கண்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண்மைக்கு உரிய நேரத்தில் நீர் வழங்கப்படாததால் சுமார் 1500 ஏக்கரில் வேளாண்மை செய்ய முடியாத நிலையில் உள்ளதாக பிரதியமைச்சர் முரளிதரனிடம் முறையிட்டனர்.

பிரதியமைச்சர் உடனடியாக மாவட்ட செயலாளர் மற்றும் நீர்பாசன பணிப்பாளர் ஆகியோருடன் தொடர்புகொண்டு நீர் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X