2026 மே 09, சனிக்கிழமை

சட்டவிரோத மின்பாவனைக் காரணமாக 23 பேர் கைது

Kogilavani   / 2013 ஜூன் 02 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மின்பாவனை காரணமாக 23 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 355,653 ரூபா தண்டப்பணமாக பெறப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரி எம்.ஆர்.எம்.பி.தஸநாயக்க தெரிவித்தார்.

கடந்தவாரம், இலங்கை மின்சார சபையின் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட விசேட குழுவினர் திடீர் சோதனையை நடத்தியுள்ளனர்.

இதன்போது சட்டவிரோத மின்பாவனையில் ஈடுபட்ட மேற்படி 23 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், கடந்த 28ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது மின்மானிகளை உடைத்து சட்டவிரோதமாக மின்சாரம்பெற்ற குற்றத்தின் பேரில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டதுடன் இவர்களில் ஒருவருக்கு 82,489  ரூபாவும் மற்றவருக்கு 32,346  ரூபாவும் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 29ஆம் திகதி வவுனதீவு பொலிஸ் பிரிவில் மேற்கொண்ட சோதனையின்போது சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற பத்து பேர் கைதுசெய்யப்பட்டு தலா ஒருவரிடம் இருந்து 7,750 வீதம் அறவிடப்பட்டுள்ளது.

30ஆம் திகதி கல்குடா பொலிஸ் பிரிவில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டதுடன் இவர்களில் ஒருவருக்கு 46,010 ரூபாவும் மீதி ஆறு பேருக்கு தலா 7650 ரூபா வீதம் அறவிடப்பட்டுள்ளது.

31ஆம் திகதி காத்தான்குடியில் நான்குபேர் கைதுசெய்யப்பட்டு தலா ஒருவருக்கு 17,852 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரி எம்.ஆர்.எம்.பி.தஸனாயக்க மேலும் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் புலன்விசாரணைக்குப் பொறுப்பான முகாமையாளர் எல்.சேனாரத்ணவின் வழிகாட்டலில் பிரதி புலனாய்வு அதிகாரி எல்.பி.சமரதுங்க மற்றும் புலனாய்வு அதிகாரி எம்.ஆர்.எம்.பி.தஸனாயக்க ஆகியோரின் தலைமையில் இக்குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்செய்து சட்ட விரோதமாக மின்சாரம் பெற்றுவரும் நபர்கள் தொடர்பாக தகவல்களைப் பெற்று வருகின்றனர்.

இந்நபர்கள் தொடர்பில் அந்தந்த பிரதேச பொலிஸ் நிலையங்கள் மூலம் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .