2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கட்டுமான அபிவிருத்திகளுக்காக 3600 மில்லியன் ரூபா: முரளிதரன்

Kogilavani   / 2014 மே 13 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுமான  அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக 3600 மில்லியன் ரூபா நிதி கைவசமுள்ளது' என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில்  முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை(12) பனம்பொருள் கைப்பணி மாதிரிக் கிராமம் மட்டக்களப்பு மைலம்பாவெளியில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில்  முயற்சி அபிவிருத்திஅமைச்சர் டகள்ஸ் தேவாநந்தா பிரதம அதிதியாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 'அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த அமைச்சைப் பொறுப்பெடுத்ததன் பின்புதான் மட்டக்களப்புப் பிரதேசத்தில் பனம்பொருள் உற்பத்தி புத்தெழுச்சி பெறத் துவங்கியுள்ளது.

மட்டக்களப்பு தாளங்குடாவிலும், மயிலம்பாவெளியிலும் இயங்கும் இரண்டு பனம்பொருள் உற்பத்திப் பயிற்சி நிலையங்களில் யுவதிகளுக்கும் பெண்களுக்கும் பயிற்சியளிப்பதற்காக 15 இலட்சம் ரூபா நிதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒதுக்கியுள்ளார்.

இதைவிட மேலும் இருபது இலட்சம் ரூபா பனம்பொருள் உற்பத்தி சம்பந்தப்பட்ட வாழ்வாதாரத்தின் வேறு தேவைகளுக்காக அமைச்சரினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே எமது அனைத்துக் கட்டமைப்புக்களையும் பாரிய அளவில் நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம். பாதைகள், பாலங்கள், குளங்கள், பாடசாலைக் கட்டிடங்கள், வைத்தியசாலைகள் என்று எங்கு சென்று எதனைப் பார்த்தாலும் பாரிய அபிவிருத்திகள் நடந்திருக்கின்றது.

இவ்வாறு கட்டுமான அபிவிருத்திகள் வளர்ச்சி கண்டு வரும்போது அதற்குச் சமாந்தரமாக ஒவ்வொருவரின் தனிநபர் அபிவிருத்தியும் வளர்ச்சி காண வேண்டும்.

இந்த இரண்டும் வளர்ச்சி கண்டால்தான் அது அபிவிருத்தி என்று பொருள்படும். இப்பொழுது மட்டக்களப்பு மாவட்டம் ஒரு சுற்றுலா மையமாக மாற்றமடைந்து வருகின்றது. பாசிக்குடா சுற்றுலாப் பகுதியில் 1040 அறைகளைக் கொண்ட ஹோட்டல்கள் உள்ளன.

அங்கே சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய இயற்கையான எமது பாரம்பரிய கைத்தொழில் உற்பத்திகளைச் சந்தைப்படுத்த முடியும்.
இதையெல்லாம் மட்டக்களப்பு மக்களுக்காகச் செய்வதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதுவித அரசியல் எதிர்பார்ப்புக்களும் இல்லை.

இப்போதுள்ள நாடாளுமன்றத்திலே உள்ள ஒரேயொரு அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட தமிழ் அமைச்சர் என்றால் அது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதான்.

அப்படிப்பட்ட ஒரு பற்றுறுதியுடன்தான் அவர் இங்கு மட்டக்களப்புக்கு வந்திருக்கின்றார். இதில் அவருக்கு அரசியல் நோக்கங்கள் எதுவும் இல்லை. என்னையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவையும் தவிர வடக்கு கிழக்கைச் சேர்ந்த வேறெந்த தமிழ் அமைச்சரும் நாடாளுமன்றத்திலே இல்லை.

இப்படி எங்களைப்  போல் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் அமைச்சர்கள்  இன்னும் சிலர் அரசிலே இருப்பார்களென்றால் அது வடக்கு கிழக்கு மக்களுக்கு பாரிய அபிவிருத்தியைக் கொண்டு வரும்.

அரசின் ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு குடிமகனின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதும் இந்த மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக கட்டுமானங்களை மேற்கொள்வதுமாகத்தான் இருக்கின்றது.

அத்தகையதொரு கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உங்களையும் உங்கள் உறவுகளையும் உடமைகளையும் இழப்புக்களிலிருந்து காப்பாற்றி இன்று யுத்த வடுக்களை மாற்றக் கூடிய விடயங்களை ஏற்படுத்தித் தந்த பெருமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையே சாரும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X