2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'மட்டக்களப்பில் 12,000 வீடுகள் புனரமைக்க வேண்டியுள்ளது'

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 20 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கடந்தகால போரின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பகுதியளவில் சேதமடைந்த 12,000 வீடுகள் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், செங்கலடி, ஓட்டமாவடி ஆகிய  பிரதேச செயலாளர் பிரிவுகளில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இந்த நிலையில், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஐயன்கேணியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'12 ஆயிரம் வீடுகளைப் புனர்நிர்மாணம் செய்து வழங்க வேண்டியிருந்தபோதிலும், தற்போது 4 ஆயிரம் வீடுகளை புனர்நிர்மாணம் செய்து கொடுப்பதற்கே அனுமதி கிடைத்திருக்கின்றது. இன்னும் 8 ஆயிரம் குடியிருப்பாளர்களின் வீடுகளைப் புனர்நிர்மாணம் செய்வதற்கான அனுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்

அரசாங்கத்தினால் ஒரேயடியாக எல்லா வீடுகளையும் புனர்நிர்மாணம் செய்தோ அல்லது புதிதாக அமைத்தோ தரமுடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் இந்த விடயத்தில் உதவி நிறுவனங்களின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

நான் அரசசார்பற்ற நிறுவனங்களை சமூகநலப் பணிகளுக்காக இணைப்புச் செய்கின்ற அதிகாரி என்கின்ற வகையில்,  பாதிக்கப்பட்ட மக்களின் விடயத்தில் அவர்களது வாழ்விடம் வாழ்வாதாரம் மற்றும் இன்னபிற வசதிகளைச் செய்வதில் அரசசார்பற்ற நிறுவனங்கள் மிகப்பெரிய பங்காற்ற முடியும்.

அந்த வகையில் முஸ்லிம் எய்ட் நிறுவனம் தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடில்லாது அந்த நிறுவனத்திற்குக் கிடைக்கும் நிதியைக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள தகுதியான பயனாளிகளை இனங்கண்டு தமிழ்ப் பிரதேசங்களிலும் முஸ்லிம் பிரதேசங்களிலும் தனது சேவையை ஆற்றி வருகின்றது.

இந்த நிறுவனத்திற்கு நாமும் மாவட்டச் செயலக மட்டத்தில் எமது பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்ற அதேவேளை, இவ்வாறான ஒத்துழைப்பை வழங்குமாறு பிரதேச செயலகங்களுக்கும் பணிப்புரை விடுத்திருக்கின்றோம்.' என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .