Suganthini Ratnam / 2016 நவம்பர் 13 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு தேரர் ஒருவர், சிவில் அதிகாரிகள் மீது தொடர்ந்தும் விடுத்துவரும் அச்சுறுத்தல்களுக்கு பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் தாமதமின்றி உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும். இந்நிலை தொடருமானால் அதிகாரிகளினால் சிவில் நிர்வாகத்தை முன்னெடுக் முடியாத நிலையே எற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் எல்லையான பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கச்சைக்கொடி கிராமத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டுவரும் பெரும்பான்மையினக் குடியேற்ற முயற்சிகளைத் தடுக்கச் சென்றிருந்த பிரதேச செயலாளர், கிராம சேவை அலுவலர், காணி அதிகாரி உட்பட அதிகாரிகளுக்கு இவரால் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது இது தொடர்பான வீடியோ ஒளிப்பதிவு நாடா சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவரது மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பொன்றில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் 'தற்போதைய அரசாங்கத்தை நல்லாட்சி என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். இந்த ஆட்சி நல்லாட்சி என கூறுமளவிற்கு இல்லை. முன்னைய அரசாங்கத்தைப் போன்றுதான் இந்த அரசாங்கத்திலும் பௌத்த குருமார்களின் தமிழர் தாயகத்தை பௌத்தமயக்கும் நடவடிக்கை தொடர்கிறது. இது ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ தெரியாமல் அல்ல.
கிழக்கு மாகாணத்தில் சில மாதங்களுக்கு முன்பு பௌத்த மக்கள் இல்லாத சாம்பல் தீவு சந்தியில் பௌத்த சிலை வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. இதுபோன்று வாகரைப் பிரதேசத்திலுள்ள காயான்கேணியில் பௌத்த விகாரை அமைப்பதற்கு காணி கேட்கிறார். இதற்கான எதிர்பையும் ஆட்சேபனைனையும் நான் தெரிவித்துள்ளேன்.
சில நாட்களுக்கு முன்பு அம்பாறை இறக்காமம் மாணிக்கமடு பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்களை தமிழ் - முஸ்லிம் தலைமைகள் ஜனபாதிபதி பிரதமர் என உரிய தரப்பினரிடம் கொண்டு சென்றாலும் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அரசு நடவடிக்கையெடுத்ததும் இல்லை. எடுக்கப் போவதும் இல்லை இதுதான் யதார்த்தம்.
இரு வருடங்களுக்கு முன்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரோ மட்டக்களப்பு பிள்ளையாரடி சந்தியில் புத்த சிலை நிறுவுவதற்கான முயற்சி மேற்கொண்டிருந்தார். அதனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொ.செல்லராசா, பா.அரியநேத்திரனுடன் நானும் இணைந்து மக்கள் சக்தி மூலம் முறியடித்தோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமூகமான நிலை நிலவும் இந்த காலப்பகுதியில் சிவில் நிர்வாகத்திற்கு அச்சுறுத்தலாக காணப்படுகிறார். மண்முனை வடக்கு பிரதேச செயலத்தில் முரண்பட்டுள்ளார். இதற்கு முன்பு கச்சைக்கொடி குடியேற்றத்தை தடுத்தபோது பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் புகுந்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மங்களராம விகாரையில் மின்மாணியை பரிசோதிக்கச் சென்ற இலங்கை மின்சார சபை உயர் அதிகாரியை தாக்கியுள்ளார்.
அங்கு கடமையிலிருந்த பொலிஸார் இந்த விடயத்ததில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை போல் தெரிகிறது. பௌத்த பிக்குவினால் சிவில் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் அந்த இடத்தில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்;தக்கது.
இதுபோன்ற செயற்பாடுகள் நல்லாட்சிக்குப் பாதகம் என கூறலாம் ஆனால் நான் அவ்வாறு கூறமாட்டேன் காரணம் தற்போதைய ஆட்சி நல்லாட்சி அல்ல அதிகாரத்தில் உள்ளவர்களில் மாற்றம் ஏற்பட்டுள்தே தவிர ஆட்சி மாறவில்லை.
மாவட்டத்தில் சிவில் நிருவாகத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் குறித்த பௌத்த பிக்குவிற்கு எதிராக உரியமுறையில் சட்ட நடவடிகையெடுத்திருக்க வேண்டும். இனிமேலும் பொறுமைகாக்காமல் நடவடிக்கையெடுக்க வேண்டும்.
கச்சைக்கொடி குடியேற்றம் தொடர்பாக உள்ளுர்வாசிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையும் மீறி பௌத்த பிக்குவின் செயற்பாடுகள் தொடர்கின்றது என்பதையும் அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
சட்டவிரோத குடியேற்றம் பௌத்த வழிபாட்டு தலம் விஸ்தரிப்பு தொடர்பாக புணானையிலும் பிரச்சினை உருவான போது அங்குள்ள பௌத்த மதகுரு மற்றும் தமிழ் சிங்கள மக்களும் இணைந்து கலந்துரையாடி சுமூகமான தீர்மானத்துக்கு வரமுடிந்தது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இனமுறுகலை ஏற்படும் வகையில் செயற்படும் சுமனரத்ன தோரோவை இந்த மாவட்டத்தைவிட்டு வெளியேற்ற நடவடிக்கையெடுக்குமாறு மதவிவகார அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்' என்றார்
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago