Suganthini Ratnam / 2016 மே 25 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அதிகாரப்பகிர்வின் நன்மைகளை அனைத்து இன மக்களும் அனுபவிக்கச் செய்வதே நிரந்தர சமாதானத்துக்கும் நீடித்து நிலைக்கும் அபிவிருத்திக்கும் வழிகோலும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை 15 கோடி 55 இலட்சம் ரூபாய் செலவில் 49 அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
அதில் முதலாவதாக மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் 55 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல்லை முதலமைச்சர் புதன்கிழமை நாட்டிவைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இந்த நாட்டுக்கே இன ஐக்கியத்துக்கு முன்னுதாரணமாகவுள்ள கிழக்கு மாகாண சபையை அகௌரவப்படுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இன ஐக்கியத்துடன் இணைந்து இந்த மாகாண சபையை ஆள்கின்றார்கள்' என்றார்.
'எமது திட்டங்களும் வெளிப்படைத் தன்மையுள்ளதாக இருக்கின்ற அதேவேளை, எல்லோரும் இன ஐக்கியத்துக்காகப் பாடுபடுகின்றோம் என்பதும் இந்த நாட்டுக்கு வெளிப்படையாகத் தெரியும். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 18 இலட்சம் மக்களும் இந்த ஒற்றுமையின் முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்கள்' என்றார்.
'இனப் பிரச்சினையால் சின்னாபின்னாமாகிப் போன இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் கிழக்கு மாகாண சமூகம் கவனமாகச் செயற்பட்டு வருகின்றது. ஆகையால். கிழக்கு மாகாண ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மாகாண சபை நிர்வாகத்தையோ அல்லது முதலமைச்சர் அந்தஸ்தையோ தரக்குறைவாக நடத்தும் எந்தச் சந்தர்ப்பத்தையும் நாம் அங்கிகரிக்கப் போவதில்லை.
கடந்தகால வன்முறைகளினால் ஈடுசெய்ய முடியாத இழப்புகளை கிழக்கு மாகாண மக்கள் தாங்கிக்கொண்டு நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக ஓங்கிக் குரல் கொடுத்துக்கொண்டிருக்;கின்றார்கள். கடந்த வாரம் சம்பூரில் நடந்த சம்வம் தனிப்பட்ட முறையில் அது எனக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானம் அல்ல. அது ஒட்டுமொத்தமாக கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுக்கும் இந்த சிறப்பான மாகாண நிர்வாகத்துக்கும் ஏற்படுத்தப்பட்ட அவமானமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
சாதாரண ஒரு கடற்படை அதிகாரி ஒரு மாகாணத்தின் முதலமைச்சரை தடுத்து நிறுத்தி அவமானப்படுத்துவது இந்த நல்லாட்சிக்கு நல்லதல்ல. எந்தத் தடைகள் வந்தாலும் சகல விதத்திலும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை கல்வி, சுகாதாரம், மக்களின் வாழ்க்கைத்தரம், வருமானம் ஆகியவற்றில் அபிவிருத்தி அடைந்து பொருளாதாரத்திலும் உணவு உற்பத்தியிலும் தன்னிறைவுள்ள ஒரு மாகாணமாக மாற்றுவதற்கான தூரநோக்குள்ள வரைவுத் திட்டத்தின் முதற்கட்டமாக இந்த அபிவிருத்தித் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.

19 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago