Suganthini Ratnam / 2016 ஜூன் 03 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்த இராணுவப் பிரசன்னம் அமைதிக்கு உகந்தது அல்ல என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.
தேசிய சமாதானத்துக்;காக சமாதானம் மற்றும் சர்வ இன நல்லிணக்கத்துக்கான சர்வமத சமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுவூட்டும் அமர்வு, இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கீறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது 'தற்கால அரசியல் சூழலில் தேசிய சமாதானப் பேரவையின் வகிபாகம்' எனும் தொனிப்பொருளில் அவர் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'இராணுவத்தினர் இன்னமும் வடக்கு, கிழக்கு வாழ் மக்களது வாழ்விடங்களில் நிலைகொண்டிருப்பதால், அமைதிக்கான சூழ்நிலை இப்பொழுதும் அச்சத்துடனேயே கழிகிறது.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், இந்த நாடு எப்படி ஆளப்பட வேண்டும் என்று எந்த ஒப்பந்தங்களும் இல்லை. இது ஒரு துரதிஷ்ட நிலைமை' என்றார்.
'கடந்த 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நாட்டில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் தேசிய சமாதானத்தையும் இன சௌஜன்யத்தையும் உருவாக்குவதற்கும் இதுவே மிகச் சிறந்த காலகட்டம் என்று நான் நினைக்கின்றேன்.
யுத்தம் நிறைவடைந்து விட்டது. ஆயுத முரண்பாடுகள் இல்லை, ஆயுதக் குழுக்கள் இல்லை. ஆகவே, இதைவிட சிறந்த கால கட்டம் இருக்கவே முடியாது.
அத்துடன், இரண்டு மிகப் பெரிய அரசியல் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ஆட்சி அமைத்து அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை, இலங்கை சிறுபான்மைச் சமூகங்களின் தலைவர்களும் ஆட்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றார்கள். ஆகவே, அரசியல் தீர்வு காண்பதற்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம்' என்றார்.
'கடந்த காலத்தில் ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சியும் எதிரும் புதிருமாகவே இருந்து வந்தன. ஆனால், அந்த நிலைமை தற்போது இல்லை.
மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே வெள்ளை வான் பீதி உட்பட வாழ்வதற்கு அச்சம் தரும் அனைத்து நடவடிக்கைகளும் மாற்றம் கண்டன. ஆனால், புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இன்னமும் தாமதம் இருந்து வருகின்றது.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான படிமுறை நடவடிக்கைகளை நாட்டு மக்களுக்குக் கசிய விட்டால், அது இனவாதிகளுக்கு அவலாக மாறி இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நடவடிக்கைகளை சீர்குலைத்துவிடும் என்பதால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நடவடிக்கைகளை உள்ளரங்கமாக எடுத்து வருகின்றார். அது அரசின் யுக்தித் திட்டமிடலாக இருக்குமோ என்று நான் கருதுகின்றேன்.
நாட்டின் நல்லிணக்கத்துக்கு மத மற்றும் சமூகத் தலைவர்களின் பங்கு முக்கியமானது. சமூக ஒற்றுமை, சகோதரத்துவம், கருணை, பொறுமை, அன்பு, அஹிம்சை போன்ற குணாம்சங்கள் சகோதரத்துவ மத போதனைகள் மூலம் சமூக இணக்கப்பாட்டுக்;குப் பாரிய பங்களிப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முடியும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago