Niroshini / 2017 பெப்ரவரி 12 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித்
பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, ஆதாரமில்லாத குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலை விடயமாக பிரதியமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபித்த விடயம் குறித்தே முதலமைச்சர் இந்த மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி, என்னால் தடுக்கப்பட்டதாக பிரதியமைச்சர் அமீர் அலி, நாட்டின் உயரிய சபையான நாடாளுமன்றத்தில் குற்றஞ்சுமத்தியிருந்தார்.
"இதற்கு முன்னர், இதே குற்றச்சாட்டை இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் ஷரீப் சுபைர் ஆகியோர் முன்வைத்திருந்த போதும், சில்லறைத்தனமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிப்பதற்கு நான் ஒரு போதும் விரும்புவதில்லை.
"ஏறாவூர் ஆதாரவைத்தியசாலைக்கு வெளிநாட்டு வர்த்தகர் ஒருவரின் உதவியுடன், தமது அமைப்பினால் உதவிகளை வழங்க வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கு முதலமைச்சர் முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் தமது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.
"அவ்வாறு ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு உதவிகளை வழங்க இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்திருப்பாராயின், அவர் கோரிக்கை விடுத்த உத்தியோகபூர்வ கடிதத்தை வெளியிடுமாறு வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
"ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு உதவிகளை வழங்க விரும்புவதாக அவர் தெரிவித்திருப்பாயின், சாதாரண அரசாங்க நிர்வாக நடைமுறையின் படி பல மில்லியன் கணக்கான உதவிகளுக்கு கட்டாயம் எழுத்துமூலக் கோரிக்கைகளை அவர் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
"நான் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை இடுபவராக இருந்தால் அந்தக் கோரிக்கை கடிதம் கொடுக்காமல் எனக்கு தடுத்திருக்கவும் முடியும். என்னை மீறி கொடுத்தார் என்ற ரீதியில் வைத்திய அத்தியகட்சகருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கவும் முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேற்று பிரிவு ஆகியவற்றை நாம் அபிவிருத்தி செய்ததுடன், அதற்குரிய உபகரணங்கள் மற்றும் சிற்றூழியர்களையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வளம் குறைந்த ஆதார வைத்தியசாலையான ஏறாவூர் ஆதார வைத்தியசாலையை, வளம்மிக்க ஆதார வைத்தியசாலையாக மாற்ற, அதற்கான சி.சி.டி.வி பாதுகாப்பு கமெராக்கள் மற்றும் நோயாளர்களை ஏற்றி இறக்க உதவியான மின் தூக்கி ஆகியவற்றையும் பெற்றுக் கொடுத்துள்ளோம்,
"அத்துடன் இவ்வாண்டு, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களின் உதவியுடன், 117 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளோம்,
"ஆகவே, வீண்பழி சுமத்தல்களை விடுத்து, கிழக்குக்கான அபிவிருத்திகளைப் பெற்றுக் கொடுக்க, எமது மாகாண அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டுமென பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago