Suganthini Ratnam / 2016 ஜூன் 06 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
'இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக தமிழ் பேசும் சமூகம் இணைந்து புதிய ஆட்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த அரசாங்கம் இனப் பிரச்சினைக்கு தீர்வை வழங்கும் என்று நாம் நம்பியுள்ளபோது, எதுவும் இல்லாத நிலைமை தமிழர்களுக்கு ஏற்படப் போகின்றது என்பதை ஆரூடம் கூறும் நிலைமை உள்ளது' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பெரியகல்லாறுப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை நடைபெற்ற சிறுவர் பூங்கா திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இந்த நல்லாட்சியில் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதையே தற்போதைய சம்பவங்கள் காட்டுகின்றன' என்றார்.
'இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் தமிழ் மக்களுக்கு சில அபிலாஷைகள் இருந்துவந்தன. அந்த அபிலாஷைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் பல போராட்டங்களை நடத்தினார்கள். அந்தப் போராட்டங்கள் சாத்வீகப் போராட்டமாக, ஆயுதப் போராட்டமாக இருந்தன. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின் மீண்டும் இராஜதந்திரப் போராட்டமாக மாறி இடம்பெற்று வருகின்றது. எனினும், தமிழர்களின் அபிலாஷைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக மக்கள் கருத்துகளை அறியும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழு, இன்று கையை விரித்துள்ளது. இந்த நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழர்கள் எந்த அபிலாஷையை கேட்டார்களோ, அது சுக்குநூறாகும் வகையிலான அறிக்கையை அது அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இன்று தமிழ் மக்கள் குழப்ப நிலையில் உள்ளனர். நல்ல அரசாங்கத்தில்; இருந்துகொண்டு தீர்வைப் பெற முடியாத நிலையில் உள்ளதை எண்ணி தமிழ் மக்கள் அங்கலாய்த்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியாது என்று மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றையாட்சின் கீழ்தான் அதிகாரப் பரவலாக்கலே தவிர, வேறு எதுவும் வழங்கப்படமாட்டாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் மக்களினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆட்சியில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என நாங்கள் எண்ணியிருந்தபோது வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பும் இல்லை, சமஷ்டியும் இல்லை என்ற நிலையே ஏற்பட்டுள்ளது. எனினும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.
19 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago