2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'எனது மகளை மீட்டுத்தாருங்கள்'

Kogilavani   / 2016 ஜூன் 08 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ.ஹுசைன்

ஜோர்தானில் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தனது மகளை மீட்டுத்தருமாறு மட்டக்களப்பு, ஏறாவூர் ஆறுமுக்கதான் குடியிருப்பைச் சேர்ந்த புவனேஸ்வரி நேசதுரை என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்படி கிராமத்தைச் சேர்ந்த நேசதுரை சர்மினி என்ற 26 வயது பெண், கடந்த 2010  ஏப்ரில் மாதம், கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரினூடாக, வீட்டுப் பணிப்பெண்ணாகத் தொழில்வாய்ப்புப் பெற்று ஜோர்தான் சென்றுள்ளார்.

இவர் சென்று 6 வருடங்களாகின்ற போதிலும் இதுவரை ஒருமுறையேனும் நாட்டுக்குத் திரும்பி வரவில்லை எனவும் கடந்த நவம்பர் மாத்திலிருந்து அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தயாரான புவனேஸ்வரி நேசதுரை கூறியுள்ளார்.

'கடந்த ஆறு வருடங்களாக எனது மகள், தான் பணிபுரியும் வீட்டில் பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாகியமை தொடர்பில்,   வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவுக்கு 4 தடவைகள் சென்று முறையிட்டப்போதும் இதுவரை அவர்கள், எமது மகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவில்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்

'எனது மகள் அலைபேசி பாவிப்பதை, வீட்டு எஜமானர்கள் அனுமதிக்கவில்லை. அதனால், அவர்களது வீட்டு தொலைபேசியூடாகத்தான்  (0096253500553) பலமுறை தொடர்புகொண்டு தான் அங்கு அனுபவிக்கும் கொடுமைகள் தொடர்பில் என்னிடம் எடுத்துரைத்தாள். கடந்த 2015 நவம்பர் மாதம் 29ஆம் திகதிக்குப் பின் எனது மகளை தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே, ஜோர்தானில் தடுத்து வைக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் எனது மகளை மீட்டுத் தாருங்கள்' என அவர் நாடாளுமன்ற உறுப்பினர்  அலிஸாஹிர் மௌலானாவிடம் கண்ணீர்மல்க கோரியுள்ளார்.

இவ்விடயத்தை இலங்கையிலுள்ள ஜோர்தான் தூதுவராலயத்தின் கவனத்துக்குக் கொண்டுச் சென்றுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X