2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'எமது பிரதேங்களில் தொழில் வாய்ப்புகளை நாங்களே வழங்கும் நிலை ஏற்படும்'

Suganthini Ratnam   / 2016 மே 27 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
'புதிய அரசியல் யாப்பு உருவாக்கலில் சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறை வரும்போது நாங்கள் மத்திய அரசை எதிர்பார்த்துக்கொண்டிருக்காது, எமது பிரதேங்களில் அபிவிருத்தியையும் தொழில் வாய்ப்புக்களையும் நாங்களே வழங்கும் நிலை ஏற்படும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு, இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.  
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கடந்த கால ஆட்சியின்போது, எமது மக்களுக்கு பலவிதமான கொடுமைகள் இழைக்கப்பட்டன. காணாமல் போனோர் என்ற பட்டியல் நீண்டுகொண்டு சென்றது. பட்டதாரி ஆசிரியர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. கடத்தப்பட்டார்கள், காணாமல் போனார்கள்.
 
எமது பிரதேசங்களில் நல்லாட்சி மலரவேண்டும். மக்கள் சுதந்திரமாக சுவாசித்து  நடமாடவேண்டும் என்ற நோக்கத்திற்காக 2015ஆம் ஆண்டு வந்த ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
 
கடந்த கால ஆட்சியுடன் ஒப்பிடும்போது, புதிய ஆட்சியில் நல்ல விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை. இராணுவம் கையகப்படுத்தியிருந்த பல ஏக்கர் காணிகள் வடக்கிலும் கிழக்கிலும் விடுவிக்கப்பட்டுள்ளன. சம்பூரில் விடுவிக்கப்படாது என்று அனைவராலும் நம்பப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களின் கைகளுக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படாவிட்டாலும், கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டுள்னர்.
 
நல்லாட்சி என்கின்ற ஜனநாயக ஆட்சி மலர்ந்திருக்கும் சூழ்நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்ற படித்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாயப்புகள் இல்லாமல் வீதிகளில் அலைந்து திரிகிறார்கள். வெளிநாடுகளிலிருந்து எமது பிரதேசங்களில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த அரசாங்கம் வாய்ப்புகளை வழங்கும்போது அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முடியும்.
 
நல்லாட்சி என்பது மக்கள் மத்தியில் செல்லக்கூடிய வகையில் சில கோரிக்கைகளை முன்வைத்துக்கொண்டிருக்கிறோம். தொழில் வாய்ப்புகள் பற்றிய விடயத்தில் இனம் மதம் பிரதேசம் என்பவற்றை காரணிகளை மையமாக வைத்து புறக்கணிப்புகள் இல்லாமல் சமத்துவமான முறையில் தொழில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற வகையில் நாங்கள் கூறியுள்ளோம்.
 
நல்லாட்சியை ஏற்படுத்தி சிறுபான்மை மக்கள் பலவற்றை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனை நிறைவேற்றும் வகையில் நல்லாட்சி அரசாங்கள் செயற்படும் என்ற எண்ணம் எங்களிடம் இருக்கிறது.
 
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக சில குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன அவை அரசியல் யாப்பு மாற்றத்தினுடாக எங்களுடைய மண்ணில் நாங்கள் எங்களுடைய தலைவிதியை தீர்மானிக்கக்கூடிய விதத்தில் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
 
எங்களுடைய பிரதேசங்களில் நியமனங்களை வழங்கக்கூடிய அதிகாரம் எங்களுக்கு கிடைக்கக்கூடிய விதத்தில் அரசியல் யாப்பில் அதிகாரங்கள் கிடைக்க வேண்டும். எதிர்காலத்தில் வரக்கூடிய தீர்வு சமஷ்டி கட்டமைப்பை உள்ளடக்கியதாக வரும்போது நாங்கள் மத்திய அரசை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் எங்கள் பிரதேசங்களில் அபிவிருத்திகளையும் நியமனங்களையும் நாங்களே செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X