2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'சிறுபான்மை சமூகம் தொடர்பில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 18 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இந்த நாட்டில் நல்லாட்சியில் கூட பெரும்பான்மையின மக்களின் கலை, கலாசார பாரம்பரியங்களுக்கு மட்டுமே முக்கியத்துவமளிக்கப்படுவதுடன் சிறுபான்மை சமூகம் தொடர்பில் கருத்தில் கொள்ளப்படுவதில்லையென கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'தற்போது நாட்டில் நிலவுகின்ற காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்வதுபோல் இங்கேயும் நிலைமைகள் தோன்றிவிடுமோ என்ற அச்சம் எம்மனதில் தோன்றியுள்ளது.

சுனாமி அனர்த்தத்தின்போது இயற்கை வளங்கள் பாதிக்கப்பட்டதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். மழைக்காலங்களில் வெள்ள அனர்த்தத்தினாலும் வெயில் காலங்களினால் வரட்சியினாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன. இதன்காரணமாக மாவட்டத்தின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து செல்வதுடன் கஷ;டப்பட்ட பிரதேசமாகவுள்ள எமது மாவட்டம் மீண்டும் மீண்டும் வறுமைக்கோட்டின் கீழே தள்ளப்பட்டுவருகின்றது.

இந்நாட்டிலுள்ள நல்லாட்சி அரசாங்கததினால் தமிழர்களுடைய கலை கலாசாரங்கள் மாற்றமடைந்து வருகின்றன. எமது நாட்டின் பிரதமர் அவர்கள் விவசாயிகளின் கால்நடைகளுக்காக கொண்டாடப்படுகின்ற மாட்டுப்பொங்கல் தினத்தினை எமது தமிழர்களின் பொங்கல் தினமாக நுவரெலியா மாவட்டத்தில் கொண்டாடியிருக்கின்றார். இது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.

அண்மையில் கலால் திணைக்களத்தினால் சிங்கள மக்களின் பௌர்ணமி தினங்களிலும் சித்திரைப் புத்தாண்டு தினங்களிலும் மதுபானசாலைகள் மூடப்படவேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

சித்திரைப் புத்தாண்டானது தமிழர், சிங்களவர் இருவரும் கொண்டாடுகின்ற விழா என்பதன் காரணமாகவே அன்றைய தினம் மதுபானசாலைகள் மூடப்படவேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. தமிழர்களின் புனித நாட்களில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டிருக்கும்.

ஜனாதிபதி அவர்கள் ஒருசில காரணங்களினால் பொங்கல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் பிரதமர் அவர்கள் மாட்டுப்பொங்கல் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கின்றார்.

இந்த நாட்டில் ஆட்சிமாற்றத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட இந்த தேசிய அரசாங்கமானது தமிழர்களுக்கான நியாயமான சுயநிர்ணய உரிமையினை வழங்குவதற்கு முன்வரவேண்டும்' என்றார்.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X